வேலுபிரபாகரனின் விடுதலைக் கனவு – இயக்குநர் தங்கம் இரங்கற்குறிப்பு

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 68.

‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘ராஜாளி’, ‘காதல் கதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலுபிரபாகரன்.

இவரது படங்களில் இடம்பெற்ற சாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வசனங்கள் வரவேற்பை பெற்றன.

2011 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

கடைசியாக வேதிகா, யோகிபாபு நடித்த ‘கஜானா’ படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் இயக்கிய ‘காதல் கதை’ படத்தில் நாயகியாக நடித்த ஷிர்லே தாஸ் என்பவரை தனது 60-வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் வேலு பிரபாகரன்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வேலு பிரபாகரனுக்கு நேற்று உடல்நிலை மோசமடைந்து. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இன்று (ஜூலை 18) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, ஞாயிறு மாலை தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலு பிரபாகரன் மறைவுக்கு இரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வேலுபிரபாகரனுக்கு இயக்குநர் தங்கம் எழுதியுள்ள அஞ்சலிக்குறிப்பு….

வேலு பிரபாகரன் என்கிற புரட்சிக்காரன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அணுகுவதற்கு எளிய மனிதராகத்தான் இருப்பார். யாரும் எளிதில் அணுகலாம். ஆனால் … எளிதில் அணுகிவிட முடிகிறது என்பதாலேயே அவரிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவார். 
 
சினிமா உலகின் போலித் தனங்களை, இரட்டை வேடதாரித் தனங்களை, துரோகங்களை, நயவஞ்சகங்களை,  குள்ளநரித் தந்திரங்களை, அடிமைப் புத்தியை  …  வெளிப்படையாக இழித்துரைத்த இயக்குநர். தனது அரசியல் சித்தாந்தமும், வாழ்க்கைப் பார்வையும் நட்புகளை உருவாக்குவதற்கு மாற்றாகப் பகைமையைத்தான் உருவாக்கிடும் என்று தெரிந்திருந்த போதிலும், தனதறிவை மறைத்தாரில்லை. அடிப்படையிலேயே அவர் துணிச்சல்காரர் என்பதால் அப்படி வாழ்ந்தார். தனது சுதந்திரத்தை எதன் பொருட்டும் அவர் கைவிட்டதில்லை. தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னார். தனது வாழ்க்கையைக் கூட வெளிப்படையாக வைத்துக் கொண்டார். ‘எவர் என்ன சொன்னால் என்ன? எனது வாழ்க்கைக்கு உகந்த முடிவைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிட்டுப் போகிறேன்’ என்று வாழ்ந்தவர்.
 
சினிமாவில், தனிமனித சுதந்திரத்தைப் பேணியவர் என்கிற அடிப்படையில் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர்; மதிப்பிற்குரிய மனிதர். 
 
இயக்குநர் இகோருடன் உரையாடும்பொழுதில் எல்லாம் வேலு பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிப்பார் இகோர். விருகம்பாக்கம் சங்கீதா தேசி மனே உணவகத்தில் ஒரு நாள் காலை சிற்றுண்டி உண்டுகொண்டிருந்தார் இயக்குநர் வேலு பிரபாகரன்; உடன் வந்திருந்த ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். எங்கள் நண்பர்கள் குழு அவரை நெருங்கி, நாங்களாக அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘இகோரின் நண்பர்கள்’ என்று சொன்னதும் தடைகளின்றி உரையாடத் தொடங்கினார். தமிழ்நாடு இவ்வளவு கேடுகெட்டுக் கிடக்கிறதே என்கிற கவலை, தொடர்ந்து அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. சமூக அக்கறையும், அரசியல் அறிவும், வரலாற்றுக் கண்ணோட்டமும் இல்லாத இன்றைய மொக்கை இயக்குநர்களுக்கு நடுவே … வேலு பிரபாகரன் உயர்ந்தே நிற்கிறார்.
 
தமிழ்த் தேசியம் குறித்த புரிதலில் அவர் பின்தங்கியே நிற்கிறார் என்ற போதிலும், அவரது சமூக அக்கறையின் காரணமாக மதிக்கப்பட வேண்டியவர் என்பதால், அவர் மீதான மதிப்பு இம்மியளவும் என்னிடத்தில் இன்றுவரை குறைந்ததில்லை. ‘2009க்கு பின்னரான தமிழ்த் தேசியம் என்பது ஈழத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல; தமிழ்நாட்டையும் தழுவியது’ என்கிற நவீனக் கண்ணோட்டம் அவருக்கு இல்லை. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரிய எதிர்ப்பாக முகமெடுத்த தமிழ்த் தேசியமானது இந்த நூற்றாண்டின் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பின்னர் – 1)ஆரிய எதிர்ப்பு, 2)திராவிடிய எதிர்ப்பு 3)ஓருலக ஓரரசு எதிர்ப்பு ஆகிய மும்முகங்கள் பூண்டிருக்கிறது என்கிற பின்நவீனம் அவருக்கு வாய்த்திருக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் பகுத்தறிவு வாய்ப்பாட்டுக்குள்ளும், இயக்கவியல் பொருள் முதல்வாத கணிதச் சமன்பாட்டுக்குள்ளும் நவீன வரலாற்றைப் போட்டுக் குலுக்கி அவர் கைப்பற்றியிருந்தவை எல்லாம் காலாவதியாகிப் போன பழைய விடைகளே என்கிற உண்மை அவருக்குத் தட்டுப்படவில்லை. அவ்வகையில் அவரொரு பழமைவாதிதான் – புதுமைவேட்கை மிக்கவராக இருந்தபோதிலும் (தமிழ்நாட்டு அறிவ்வுலகில் இப்படிப்பட்டவர்கள் ஏராளம்; எடுத்துக்காட்டாக எஸ்.வி. ராஜதுரை).
 
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தமிழ்த் தேசியம் என்பது முதன்மையாக உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற நவீனக் கண்ணோட்டம் அவருக்கு வாய்த்திருக்காதது போலவே, கீழைத் தேய மெய்யியல் நுண்மையும் வாய்த்திருக்கவில்லை. ஆனாலும், கீழைத் தேய மெய்யியல் மரபு உருவாக்க முனைகிறதே … விட்டுவிடுதலையாகிய சுதந்திர மனிதர் ….. அப்படியொருவராகத்தான் அவர் வாழ விரும்பினார். அவர் கற்று வைத்திருந்த பகுத்தறிவு வாய்ப்பாடும், இயக்கவியல் பொருள்முதல்வாத கணிதச் சமன்பாடும் அறிவுக்குத் திரையெனத் தொங்கியதால், கீழைத்தேய மெய்யியல் மரபின் ஊற்றுவாயைக் கண்டடைந்து ஞானாமுதச் சுனை நீரை அவரால் அருந்த முடியாமல் போயிற்று. எத்தகையதொரு அழகிய முரண்பாடு இது! இந்தத் தன்முரண் – விடுதலை விரும்பியொருவர் விடுதலையின் ஊற்றுக்கண்ணைக்  கண்டடைய முடியவில்லை என்கிற உள்முரண்பாடு – அவரது கலையில் பிதுங்கி வெளிப்படுகிறது. (திரைப்படங்களின் வழியாக அவரது படைப்பு மனதை ஆய்வு செய்வது தனியானதொரு செயல்பாடு. கட்டுரையாக அதைப் பின்னர் பார்ப்போம்). இந்த உள்முரண்பாடானது அவரது வாழ்க்கையில் சில நாடகார்த்தங்களை நிகழ்த்தியபோது அந்த நாடகார்த்தங்கள் மீதான தனது கண்ணோட்டத்தையும் பொதுவெளியில், வரலாற்றோடு பகிர்ந்து கொண்டார். வெறும் வாய்ப்பாட்டரசியலை மட்டுமே மென்றுகொண்டிருக்கிற நுன்னுணர்வு மழுங்கிப் போனதொரு உள்ளத்திற்கு இப்படியொரு துணிச்சல் வாய்த்திருக்காது. இவ்வகையில், அவர் முழங்கி வந்திருந்த பகுத்தறிவுத் தர்க்கத்தையும் பொருள்முதல் வாதத்தையும் மிஞ்சிய செய்தியாக விஞ்சி நிற்பது – அவர் தனக்குள் பேணி வந்திருந்த தனிமனித சுதந்திரமே.
 
அனைத்து அடக்குமுறைகளிலிருந்தும் மாந்தகுலம் விடுதலையடைய வேண்டுமென்று கனவு கண்டதோடு சமூக்க் கட்டுத்தளைகளில் இருந்து முற்றிலும் விடுதலையாகிய மனிதராகத் தன்னையவர் கனவு கண்டார். அந்த விடுதலைக் கனவு, இன்று அதிகாலையில் அவருக்கு நிறைவேறிவிட்டது.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response