தகுதியானவருக்குப் பொறுப்பு – சேலம் பெரியார் பல்கலை மாணவர்கள் மகிழ்ச்சி

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சி குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பெரியசாமி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நிர்வாகப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, கல்லூரி கல்வித்துறை இயக்குநர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இரா.சுப்பிரமணி, தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தரப்புக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உயர்கல்வியில் குறிப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் இந்த நேரத்தில், பெரிய குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் இரா.சுப்பிரமணி பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்.தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மைய இயக்குநராகவும், இதழியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர், பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும், மக்கள் தொடர்பு அலுவலர், பெரியார் அண்ணா கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் என 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகப் பதவிகளையும் பேராசிரியர் சுப்பிரமணி வகித்துள்ளார்.

ஜெகநாதன் துணைவேந்தராக இருந்த காலத்தில்,இரா.சுப்பிரமணி எழுதியிருந்த பெரியாரின் போர்க்களங்கள்,மெக்காலே – பழமைவாதக் கல்வியின் பகைவன் என்ற நூல்கள் எழுதியதற்காக அது குறித்து விளக்கங்கள் கேட்கப்பட்டன. மீண்டும் அவரைக் குறி வைத்து, பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1 ) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களைக் கோரி சுற்றறிக்கை விடப்பட்டது.

பல்வேறு வகைகளில் அவருக்கு எதிராகச் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றிருந்த நிலையில் அவருடைய உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ற பலனாக இப்போது இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவருடைய முயற்சியில், தமிழ்நாட்டி முதன்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில், திராவிட இலக்கியம், இதழியல் முதுகலை பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 25க்கும் மேற்பட்ட துறைகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையம் சார்பில், திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்ற ஓராண்டுப் பகுதிநேர முதுநிலைப் பட்டயப் படிப்பு நடத்தப்படவுள்ளது. இப்படிப்பிற்கு, 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதைப் பொறுப்பேற்று செயல்படுத்திக் கொண்டிருப்பவரும் இவர்தான்.

இதனால், ஒரு தகுதியானவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Response