
மே 18 என்பது தமிழர்கள் வாழ்வில் துயரம் தோய்ந்த நாள்.இலட்சக்கணக்கான ஈழத்துத் தொப்புள்கொடி உறவுகள் அழித்தொழிக்கப்பட்ட நாள்; இனப்படுகொலை செய்யப்பட்ட நாள்.
அதே மே 18ஆம் நாளில் “கோடையில் ஒரு ஜாலி” என்ற மகிழ்ச்சி கொப்பளிக்கும் உற்சாகத்தோடு “நடிகர் விஷால் திரை நட்சத்திரங்களோடும் கலக்கும் பின்னணிப் பாடகர்களின் ‘குமரியில் இதுவரை கண்டிராத நட்சத்திர இசைத் திருவிழா”வை நாகர்கோயிலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
துயர் மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும்.அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்திருந்தார்.
கொளத்தூர் மணி மற்றும் பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களுடைய கோரிக்கையை ஏற்று நாகர்கோவிலில் மே.18 அன்று நடைபெற இருந்த கொண்டாட்ட நிகழ்வு தேதி தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து திவிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
கழகத் தலைவர்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தோழர்கள் தியாகு, கோவை கு.இராமகிருட்டிணன், சுப.உதயகுமாரன்,கண.குறிஞ்சி, பொழிலன், இயக்குநர்கள் களஞ்சியம், கௌதமன், மருதுபாண்டியன் ஆகியோரும் இந்நிகழ்வின் தேதியை மாற்றக் கோரி குரல் கொடுத்தனர்.

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு நாசர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் “இந்த நிகழ்வில் நடிகர் விஷால் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்து இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி நிகழ்ச்சியின் தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும் ” தெரிவித்திருக்கிறார்கள்.
இனமுரசு சத்யராஜ் அவர்கள் இந்த கடிதத்தை கழகத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.
ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத் தலைவர் மற்றும் இன உணர்வாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நட்சத்திர கொண்டாட்ட நாளை தள்ளி வைக்க ஆவண செய்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்,இனமுரசு சத்யராஜ் மற்றும் பொறுப்பாபொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
– திராவிடர் விடுதலைக் கழகம்,
09.05.25.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


