
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் பங்கேற்காமல்,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக டெல்லியில் திறந்துவைத்த அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக அவர் சென்றதாகச் சொல்லப்பட்டது.
எடப்பாடி புறப்பட்டுச் சென்ற பின்பு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர்.
நேற்றிரவு ஒன்றியய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, முனுசாமி,சண்முகம்,தம்பிதுரை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, என்ன பேசப்பட்டது என்பது குறித்து இரண்டு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை.
எனினும், இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரவு பத்து மணி அளவில், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில்,
‘2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’
என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைவது உறுதியாகிவிட்டது. அதைத்தான் அமித்ஷா வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்று குறிப்பிட்டுள்ளதால், தமிழ்நாட்டில் அக்கூட்டணியின் தலைவர் யார்? முதலமைச்சர் வேட்பாளர் யார்? கூட்டணி அரசு என்று அறிவித்து போட்டியிடுவார்களா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அதேசமயம், 2026 இல் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையவேண்டும் என்று அமித்ஷா நிபந்தனை விதித்ததாகவும் அதை எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


