நடிகை கஸ்தூரி திடீர் வருத்தம் – பின்னணி என்ன?

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களைப் பாதுகாக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பது போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நவம்பர் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இதனல் நடிகை கஸ்தூரி தனது சமூகவலை தளப் பக்கத்தில் நவம்பர் 5 ஆம் தேதி மாலை 4.20 க்கு வெளியிட்டுள்ள பதிவில்…

கடந்த 2 நாட்களாக எனக்குப் பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இருப்பினும் எனது மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதை கடந்து வாழும் தெலுங்கு மக்களுக்கு நான் பேசிய வார்த்தைகள் குறித்து பொறுமையாக விளக்கினார்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாட்டின் உண்மையான பெருமை மிகு தேசியவாதி நான். சாதி மற்றும் பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட எனக்கு எப்போதும் தெலுங்கு மக்களுடன் சிறந்த தொடர்பு உண்டு. அது எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். நாயக்கர்கள், கட்டபொம்மன் ஆகியோரின் புகழையும், தியாகராஜர் கீர்த்தனைகளையும் கேட்டு வளர்ந்தவள் நான். என்னுடைய தெலுங்கு சினிமா பயணத்தை மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பை வாரி வழங்கியுள்ளனர்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சூழல் சார்ந்து சில நபர்கள் குறித்து பேசியவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்குச் சமூகத்தைக் குறிவைத்துச் சொல்லபட்டவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். குடும்பம் போன்ற எனது தெலுங்குச் சமூகத்தைப் புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ என்னுடைய நோக்கமல்ல. கவனக்குறைவாக அப்படி எதுவும் நடந்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் நலன் கருதி நவம்பர் 3 ஆம் தேதி தெலுங்கு மக்களைக் குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளைத் திரும்பப் பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம்பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் திசை திருப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு சகோதரர்கள், தமிழ்நாடு பிராமணர்களின் கண்ணியமிகு போரட்டத்துக்கு துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி குறிப்பிட்டுள்ள அந்த மேடைப் பேச்சுக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் நான் அப்படிப் பேசவே இல்லை என்று சொன்னார்.ஆனால் இப்போது அப்படி பேசியதை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

என்னவெனில்..

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை (நவம்பர் 5, செவ்வாய்க்கிழமை) புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரில்,எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் நடிகை கஸ்தூரி இழிவுபடுத்தி உள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கடுத்து காவல்துறை நடவடிக்கையைத் தொடங்கும் அது விசாரணையோடு நில்லாமல் கைது வரை போகக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே அவர் இந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார் என்று சமுதாய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Response