
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம் அங்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த அனைவரும் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் சூரத் தொகுதி போல் ஒரு சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள இந்தூர் மக்களவைத் தொகுதியில் தற்போதைய பாஜக பாராளுமன்ற உறுப்பினரான சங்கர் லால்வானிக்கு எதிராக காங்கிரசு சார்பில் அக்ஷய் காந்தி பாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நேற்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.எனவே, காங்கிரசு வேட்பாளர் அக்ஷய் தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதனால் அங்கு கடும்போட்டி என்பது இல்லாமல் ஆகி பாஜக வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் தோல்வி பயம் காரணமாக காங்கிரசு வேட்பாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரசு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து தனது சமூகவலை தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…,
சூரத் மற்றும் இந்தூர் மக்களவைத் தொகுதிகளில் 1984 தேர்தல் முதல் காங்கிரசு வெற்றி பெற்றதில்லை. ஆனாலும் தற்போதைய தேர்தலில் இந்த இரு இடங்களிலும் காங்கிரசு வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, வேட்பு மனுவைத் திரும்பப் பெற வைத்துள்ளனர். பாஜக தங்களின் கோட்டையாக நினைக்கும் இடங்களில் கூட, பிரதமர் ஏன் இவ்வளவு பதற்றதமாகவும், பயத்துடனும் இருக்கிறார்
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் இந்தத் தேர்தலில், பாஜக படுதோல்வியடையும் என்று ஒன்றிய உளவுத்துறை அறிக்கை சொல்வதாக ஒரு தகவல் பரவியது.அது அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தது.
இந்நிலையில் பாஜக தொடர்ந்து வெல்லும் தொகுதிகளில் கூட எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் திரும்பப் பெற வைக்கிறது பாஜகவின்.
பாஜகவின் இந்த நடவடிக்கை ஒன்றிய உளவுத்துறையின் அறிக்கை உண்மைதான் என்பதை நிரூபிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


