பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய, கிளிநொச்சியிலிருந்து மோடியிடம் மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை விடுதலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு அளிக்க முருகனின் தாயார் வெற்றிவேல் சோமினி திட்டமிட்டுள்ளார்.

இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள பளையில் வசிக்கும் அவர், இதுதொடர்பாக புதன்கிழமை கூறியது: தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் 6 பேரையும் விடுதலை செய்யக்கோரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு அளிக்க திட்டமிட்டு இருக்கிறேன். அவரைச் சந்திப்பதற்கு எனக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்கான மனுவில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்.

கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு உலகத் தலைவர்கள் பொது மன்னிப்பு அளித்துள்ளனர். அதேபோல், எனது மகனுக்கும் மன்னிப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் வெற்றிவேல் சோமினி.

ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response