தமிழகத்தின் 70 விழுக்காடு நிலத்தடி நீரை இழந்துவிட்டோம்- பச்சைத் தமிழகம் கட்சி தரும் அதிர்ச்சித் தகவல்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களால் அறியப்பட்டிருக்கும் சு.ப.உதயகுமார், தற்போது பச்சைத் தமிழகம் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அக்கட்சி தொடங்கப்பட்டது எதனால் என்பதை விளக்கி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை….

படம்- பச்சைத் தமிழகம் கட்சிக்கொடி

 

தமிழகப் பொருளாதாரம் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும், கடனிலும், கையாலாகாத்தனத்திலும் கிடந்து உழல்கிறது. எங்கும், எதிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. முதல்வர் பன்னீர்செல்வம் 2014-15 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் Rs 1,81,036 கோடி என்று தெரிவித்து, அடுத்த நிதியாண்டில் (2015-16) இது Rs 2,11,483 கோடியாக உயரும் என்றார். கடந்த 2005-06 நிதியாண்டில் Rs 7,335 கோடிக்கு விற்ற மதுபானம் நடப்பு நிதியாண்டில் (2015-16) ஏறத்தாழ Rs 29,672 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆற்று மணலையும், கடல் மணலையும், குன்றுகளையும், மலைகளையும் தனியார் நிறுவனங்கள் அள்ளி விற்று கொள்ளை லாபம் அடைகின்றன. தமிழ் மக்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர்! ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் ஏறத்தாழ எழுபது விழுக்காடு நிலத்தடி நீரை இழந்துவிட்டோம் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. வரிச்சுமை, கடன் சுமை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, போதிய வருமானமின்மை எனும் பெரும் பொருளாதாரச சீரழிவில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

தமிழகத்தின் “வாழ்க்கை” தரத்தை சற்றே கவனியுங்கள். 2014-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே அதிக தற்கொலை நிகழ்ந்த இரண்டாவது மாநிலம் தமிழகம் (16,122 பேர்). இந்தியாவின் 89 நகரங்களில் சென்னை நகரில்தான் அதிகம் பேர் (2,450) தற்கொலை செய்து கொண்டனர். 765 பட்டதாரிகள் தற்கொலை செய்து கொண்டனர் (இந்தியாவில் மொத்தம் 3,737 பட்டதாரிகள் தற்கொலை செய்தனர்). வேலையில்லா திண்டாட்டத்தால் அதிகம் தற்கொலை செய்து கொண்டவர்கள் (312) தமிழ் நாட்டில்தான். காதல் பிரச்சினையில் 5௦6 பேர் தற்கொலை செய்தனர். சாதி-மறுப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவது ஒரு முக்கிய காரணம். 2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 வயதுக்குக் குறைந்த 34 பெண் குழந்தைகளும், 24 ஆண் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 2014-ஆம் ஆண்டு 3,854 பேர் ஓட்டுனர் உரிமம் இல்லாத, உரிய வயது நிரம்பாதவர்களால் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் நடப்பது பெயரளவில்தான் மக்களாட்சியே தவிர, பெருமளவு மன்னராட்சியாகவே இருக்கிறது. பொதுமக்கள் ஆட்சியாளர்களை எளிதில் அணுக இயலவில்லை. தங்கள் குறைகளை அவர்கள் கவனத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. தமிழக அரசியல். சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் எனும் மும்மைதான் அரசியல் அரங்கை ஆட்டிப் படைக்கிறது. தமிழகத்தின் பெரிய கட்சிகள் தில்லி ஆட்சிபீடத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவதால், தங்கள் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு, தமிழ் மக்கள் நலன்களை கண்டுகொள்ளாமல் கைவிடுகின்றனர். இதனால் அரசியல் நீரோட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டுக் கிடக்கிறார்கள். அரசியல்வாதிகளை தங்கள் தலைவர்கள், வழிநடத்துனர்கள் என்று பார்ப்பதற்கு பதிலாக தங்களின் எதிரிகள் என்று மக்கள் பார்க்கும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது.

இன்னோரன்ன இழிநிலைகளால், தமிழ்ச் சமூகம் பெரும் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நமக்கு உரிமைப்பட்டத் தண்ணீரை பெறுவதற்குக்கூட இயலாத நிலையில் தத்தளிக்கிறோம். நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்குக்கூட தில்லியிடம் யாசகம் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்க் குடிமைச் சமூகத்தை குடிகாரச் சமூகமாக்கி, கையறுநிலைக்குத் தள்ளி, தமிழர்களை கையேந்துபவர்களாக, இலவசங்களைக் கண்டு ஏமாறுபவர்களாக மாற்றியிருக்கின்றனர்.

கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்குப் போகும் கெய்ல் குழாய்கள் தமிழக விளைநிலங்கள் வழியாக சுற்றிப் போகின்றன. கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, கெயில், மீத்தேன் என எங்கே பார்த்தாலும் அழிவுத் திட்டங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பாலைவனமாக்கப்பட்டு, அங்கே மீத்தேன், நிலக்கரி போன்றவை தோண்டி எடுப்பதற்கு திட்டமிடுகின்றனர். நமது ஒன்றிய, மாநில அரசுகளால் ஒரு மழை வெள்ளப் பேரிடரைக்கூட திறமையாகக் கையாள முடியவில்லை. மொத்தத்தில் தமிழர்கள் இன்னல்கள் நிறைந்து போய், இருளுக்குள் புதைந்து கிடக்கிறோம்!

நிர்வாகத் தளத்தில், ஓர் ஏமாற்று அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தின் முதலிரண்டு அலகுகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தபோது, தமிழக ஆளுங்கட்சி “அந்தத் திட்டம் முடியும் தருவாயில் இருப்பதால், உதவ இயலாது” என்று கையை விரித்தது. தற்போது திட்டமிடப்படும் துவக்க நிலையில் இருக்கும் மூன்று-நான்காவது அலகுகளை நிறுத்துங்கள் என்று கேட்டால், பேச மறுக்கிறார்கள், திட்ட வேலைகளை அனுமதிக்கிறார்கள். மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து கையெழுத்துப் போட்ட இன்னொரு கட்சியினர், நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், அந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம் என்றனர். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு திட்டத்திற்கு, நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த அவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் நேரம் ‘அதையும் எதிர்க்கிறோம்’ என்றனர். இந்தப் பின்னணியில்தான் தமிழ் மக்களின் வளம், வாழ்க்கை, வருங்காலம் போன்றவற்றை முன்னின்று காக்கும் ஒரு சமூக-பொருளாதார-அரசியல் இயக்கத்துக்கானத் தேவையை உணர்கிறோம். அதனை பூர்த்தி செய்யும் முகமாக “பச்சைத் தமிழகம்” இயக்கத்தைத் துவங்கி நடத்துகிறோம்.

Leave a Response