
அமெரிக்காவில் “டெக்சாஸ் பொறியாளர்கள் வாரிய’த்தின் செயலாளராக, அமெரிக்கவாழ் தமிழரான சொக்கலிங்கம் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் தகுதியுடைய பொறியாளர்கள் பணியாற்றுவதற்கு இந்த வாரியத்திடம் உரிமம் பெற வேண்டும். அதன்படி, புதிய பொறியாளர்கள் உரிமம் பெறுவற்கு கண்ணப்பன் கையெழுத்திட வேண்டும்.
தகுதியுடைய பொறியாளர்களுக்கு உரிமம் வழங்கி மக்களைக் காப்பது, டெக்சாஸ் பொறியியல் பணிச் சட்டத்தை அமல்படுத்துவது, டெக்சாஸில் பொறியியல் தொழிலை நெறிப்படுத்துவது ஆகியவை பொறியாளர்கள் வாரியத்தின் பணிகளாகும்.
தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் (இயந்திரவியல் பிரிவு) பட்டம் படித்த கண்ணப்பன், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பை முடித்தார்.
அவர், தற்போது “எஸ்என்சி-லாவலின் ஹைட்ரோகார்பன்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தில் மூத்த வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த கண்ணப்பன், பைப்பிங் என்ஜியனியரிங் சொசைட்டியின் வாரிய உறுப்பினராகவும், ஆசிய சொசைட்டியின் டெக்சாஸ் மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
லேசர் கதிர் அளவீட்டு முறையில் துல்லியத்தை மேம்படுத்தியதற்காக, மேரிலேண்ட் பகுதியில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டல் டைனமிக்ஸ் குழுமத்தின் விருது உள்பட பல்வேறு விருதுகளை கண்ணப்பன் பெற்றுள்ளார்.


