சிங்கள அரசின் மிரட்டலையும் மீறி யாழ் பல்கலையில் மாவீரர்நாள் நிகழ்வு நடந்தது

தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக  தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்துகொண்ட புனிதர்களின் நினைவு நாளான மாவீரர் நாள்   யாழ். பல்கலைக் கழகத்தில் உணர்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா “தீவிரவாத இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

அது மட்டுமின்றி ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்களும் இருந்தன.  அவர்களுடைய அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் நவம்பர் 27  நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு, வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயகப் பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

Leave a Response