
மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த நாம் தமிழர் கட்சி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பைச் சேர்ந்த பி.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;-
நாம் தமிழர் கட்சியின் புவனகிரி சட்டசபை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக எங்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சேத்தியாதோப்பு கூட்ரோட்டில் 27-ந் தேதி (இன்று) பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நாங்கள் ஏற்கனவே கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அப்போதெல்லாம் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. இந்தக் கூட்டம் தொடர்பாக அனுமதிகேட்டு 20.10.15 அன்று போலீசிடம் மனு கொடுத்தோம். கூட்டம் நடக்க இருந்த தனியார் இடத்தின் உரிமையாளரின் அனுமதி கடிதத்தையும் இணைத்திருந்தோம். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து கடந்த 24-ந் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.
இது எங்கள் ஜனநாயக உரிமையை மறுப்பதாக உள்ளது. அந்த உத்தரவில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தின நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
எங்களுக்கு நோட்டீசு கொடுத்து விளக்கம் கேட்காமலேயே இறுதிக் கட்டத்தில் இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். இது அரசியல் சாசனத்துக்கும், இயற்கை நீதிக்கும் முரணானது. எனவே போலீஸ் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். காரணமில்லாமல் ஒரு தடை உத்தரவை பிறப்பிக்கக் கூடாது. கூட்டம் நடத்த அனுமதி மறுத்து போலீஸ் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிபந்தனைகளுடன் கூட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதுபோல், சேலம் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த, திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர் சி.ராமமூர்த்தியும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக எங்கள் இயக்கம் பாடுபட்டு வருகிறது. மாவீரர் தினத்தை கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் அனுஷ்டித்து வருகிறோம்.
இந்த நிலையில், மாவீரர் தின நிகழ்ச்சியை கொளத்தூர் பெரியதண்ட புலியூர் பிரிவில் நடத்த அனுமதி கேட்டு கொளத்தூர் போலீசிடம் மனு கொடுத்தோம். போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘20 ஆண்டுகளாக கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தினரால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதற்கான ஆதாரங்களை போலீசார் காட்டவில்லை. திட்டமிட்ட இடத்தில் நெருக்கடி இருப் பதாகக் கூறியதைத் தொடர்ந்து கூட்டத்தை ஆலமூரில் பழனிச்சாமி மைதானத்தில் நடத்துவதற்கு மனுதாரர் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, அங்கு அவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.


