
சந்தன வீரப்பன் வாழ்க்கை குறித்த மற்றொரு படத்தின் இரண்டாவது முன்னோட்டம் ( ட்ரெயிலர்) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக அந்தப் படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை சொன்னது. இந்த தேதியில் வீரப்பனின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் கில்லிங்வீரப்பன் திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்த திரைப்படத்தின் இயக்குனரான ராம் கோபால் வர்மா தனது சமுக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இது இந்தி மொழியிலும் உருவாக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த திரைப்படம், குறிப்பாக காவல்துறையினரின் தேடுதல் வேட்டையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட மறைந்த கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரின் வாரிசான “சிவா ராஜ்குமார்” இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாலும், ராம் கோபால் வர்மா இயக்கும் முதல் கன்னட மொழி திரைப்படம் இது என்பதாலும், திரை ரசிகர்களின் கவனத்தை இந்த திரைப்படம் ஈர்த்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி சமயத்தில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


