பேசிக்கொண்டேயிருந்த நாயகி, கையைப் பிடித்து இழுத்து அமர வைத்த நாயகன் — விந்தை பாடல் விழாவில் பரபரப்பு.


அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.எல்.யேசுதாஸ் ஆர்.ஒய்.ஆல்வின், ஆர்.ஒய்.கெவின் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் விந்தை.
இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன்,  ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ரத்தீஷ்கண்ணா,இசை வில்லியம்ஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  லாரா.   இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.

இந்தப்படம், தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடிப் போகிற இடமாக காவல்நிலையம் இருக்கிறது. அப்படி இருக்கும் காவல் நிலையத்தை அனைவரும் ஒரு வித வெறுப்புடனும், அருவருப்புடனும் தான் பார்ப்பார்கள். அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் நாம் அனைவரும் சிரிப்பை  மறந்துவிடுவோம். ஆனால் இந்தப்படத்தில் ஊரில் இருந்து ஓடி வந்த  நாயகன், நாயகி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப் படுகிறார்கள் இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணிவரை அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் திரைக்கதை. ஒரு சில காட்சிகளை தவிர மற்ற அனைத்துக் காட்சிகளும் காவல் நிலையத்திலேயே படமாக்கப்பட்டது.  படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து விட்டது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.
இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா ஏப்ரல் 22 காலை சென்னை கமலாதிரையரங்கில் நடைபெற்றது. விழாவில் படக்குருவினரோடு இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, தேனப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சிறப்புவிருந்தினர்கள் முதலிலேயே பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். அதன்பின்னர் பேசிய நாயகன் மகேந்திரன் நிறையப்பேசினார். அதன்பின் நாயகி மனிஷாஜித்தைப் பேச அழைத்தனர். வந்து ஒலிவாங்கியைப் (மைக்) பிடித்தவர் விடவேயில்லை, படப்பிடிப்புத்தளத்தில் நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிகர்ச்சித்தொகுப்பாளர் அவருடைய காதில், சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் பேசிக்கொண்டேயிருந்தார். பொறுத்துப்பொறுத்துப் பார்த்த நாயகன் மகேந்திரன், எழுந்து சென்று பேசிக்கொண்டிருந்த நாயகியின் கையைப் பிடித்து இழுத்து வந்து அமரவைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நாயகி அதிர்ச்சியாகி பின் அமைதியாகிவிட்டார். அவரைக் கையைப் பிடித்து இழத்துப்போனதற்காக மகேந்திரனுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் நன்றி கூறியதால் மேலும் சங்கடத்துக்காளாகிவிட்டார் நாயகி மனிஷாஜித்.

Leave a Response