
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மைக் காலமாக பாஜக வுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவருடைய நெருங்கிய நண்பர் கவுரிலங்கேஷின் படுகொலைக்குப் பிறகு அவர் இவ்வாறு பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராகப் பேசி வருவதால், என்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது. சில இந்து அமைப்புகள் என்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்புத் திறமையை யாராலும் பறிக்க முடியாது.
பிரதமர் மோடிக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை. நல்லாட்சி நடத்துவதாகக் கூறிய நரேந்திர மோடி, நாட்டில் குழப்பங்களை உண்டாக்கி உள்ளார். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையைத் தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல், மக்களாட்சி நடத்தும் கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
என்னைக் கொல்ல சதி என்று அவர் வெளிப்படையாக இந்துஅமைப்புகள் மீது குற்றம் சுமத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.


