
மஞ்சமாக்கானூர் என்கிற கிராமம். ஓர் ஆற்றங்கரையில் இருக்கும் அக்கிராமத்து மக்கள் மருத்துவமனை, சந்தை, குழந்தைகளின் படிப்பு என எல்லாவற்றிற்கும் அக்கரைக்குப் படகில்தான் போகவேண்டும் என்கிற நிலை. இதனால் அடிக்கடி பல உயர்ப்பலிகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க அந்த ஊருக்குப் போக ஆற்றில் பாலம் கட்டவேண்டும். அரசாங்கம் அதைச் செய்து தரவில்லை.
இதனால் அந்தஊர்மக்கள் கூடி, நம் ஊரைச் சேர்ந்த ஒருவரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நம் ஊருக்குப் பாலம் கட்டுவது என்று முடிவெடுக்கிறார்கள். அதனால் அந்த ஊரிலேயே அதிகம் படித்த (ஐந்தாம்வகுப்பு) பாக்யராஜை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்கிறார்கள். அதன்பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் கதை.
மஞ்சமாக்கானூர் என்கிற ஊரின் பெயருக்கேற்பவே அங்குள்ள மக்களைச் சித்தரிக்க நினைத்திருக்கிறார் கதை,திரைக்கதை, வசனம் எழுதிய பாக்யராஜ். எல்லா நேரமும் அவர் நினைத்தது நடக்கவில்லை. இவ்வளவு அபத்தமான ஊர்ப்பஞ்சாயத்துக் காட்சிகளை யோசித்த பாக்யராஜை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாக்யராஜூம் ஜெயராமும் அண்ணன் தம்பிகள் போல் ஊருக்குள் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருப்பவர்கள்.
ஊரிலுள்ள பெரியவர்களையெல்லாம் டைட்டானிக் திரைப்படத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய் அதில் வருகிற காதலன் காதலியை அவர்கள் காதலர்கள் என்பது தெரியாமல் அண்ணன் தங்கை என்று பெரிவர்களிடம் சொல்கிறார் பாக்யராஜ். அதன்பின் அவர்கள் கேட்கும் சந்தேகங்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் பாக்யராஜ். இப்படி படத்தில் அறிமுகமாகும் பாக்யராஜ் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் படம் முழுக்க வருகிறார்கள்.
பாக்யராஜுக்கு மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதாமேனன் மலையாளப்பெண்ணாகவே வருருகிறார். மாராப்பு அணியாமல் ரவிக்கையுடன் அவர் நடமாடுவதும் அதனால் அவர் வீட்டைச் சுற்றி ஊரிலுள்ள ஆண்கள் எல்லாம் நடமாடுவதும், பாக்யராஜ் ஸ்வேதாமேனன் தம்பதியினரின் ஐந்துவயது மகன் அம்மா ங்கா கொடும்மா என்று தாய்ப்பால் கேட்பதும் அதைக்கண்டு பாக்யராஜ் எரிச்சலாவது உட்பட பாக்யராஜ் வகைக்காட்சிகள் படம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
ஜெயராமுக்கு ஜோடியாக காதல்சந்தியா வருகிறார். சந்தியா எவ்வளவு குண்டாகிவிட்டார்? ஸ்வேதாமேனனும் சந்தியாவும் சேர்ந்து கொண்டு விரிந்துபரந்த அழகை வைத்துக்கொண்டு இரண்டுபாடல்களுக்கு ஆடியிருக்கிறார்கள். பாக்யராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின்போது கட்சிகள் மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதையெல்லாம் சொல்லவேண்டுமென்பதற்காக பல காட்சிகள் வைத்திருக்கிறார்கள். பாக்யராஜை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான மணவை பொன் மாணிக்கம் நன்றாக நடித்திருக்கிறார்,
அந்தத் தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெறுவதும் அவருடைய ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலையில் நடக்கிற கூத்துகள் எல்லாம் மிகையாகத் தெரிந்தாலும் உண்மை அதுதான்.
அதுவும் சட்டமன்றத்தில் நடக்கும் காட்சிகள் எல்லாம் சமகால அரசியலைப் பிரதிபலிக்கிற மாதிரி இருக்கின்றன. பாக்யராஜ், கிடைத்த துணைமுதல்வர் பதவியை வைத்தே ஊருக்குப் பாலம் கட்டியிருக்கலாம், அது நடக்காது என்பதற்காக சில காட்சிகளை அமைத்திருப்பதும் அதன் காரணமாக அவர் எடுக்கும் முடிவும் தவறாக இருக்கிறது. அதன்பின் நடக்கும் காட்சிகளை நகைக்சுவை என்று நினைத்து எடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிரிக்கவும் முடியவில்லை ரசிக்கவும் முடியவில்லை. அதுவும் பாக்யராஜின் மனைவி ஸ்வேதாமேனன் பற்றி ஜெயராமன் பேசுவதெல்லாம் ரொம்ப அதிகம்.
இந்தப்படத்தைப் புதிய இயக்குநர் விவேகானந்தன் இயக்கியிருக்கிறார் என்பது தெரியாத அளவு படம் முழுக்க பாக்யராஜின் கைவண்ணம் தெரிகிறது.
அவர் இனிமேல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். அது அவருக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.


