2ஜி தீர்ப்புக்குப் பிறகு கனிமொழி மனநிலை, சு.சாமி கருத்துக்கு அவருடைய பதில்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள்அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21 – 2017) தீர்பளித்தது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து கனிமொழி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சத்தை நிச்சயம் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் கடந்த ஆறு வருடங்களாக நான் இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

கடந்த ஆறு வருடங்களாக பொய்ப் புகார் அடிப்படையில் இந்த வழக்கில் நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன் என்று எல்லோரிடமும் விளக்க வேண்டியிருந்தது.

அந்த நிர்வாகத்தில் வெறும் 20 நாட்கள் இயக்குநராக இருந்த காரணத்துக்காகவே நான் குற்றவாளியாக்கப்படேன் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த நிறுவனத்தின் எந்த ஒரு பொது கூட்டத்திலும் நான் பங்கேற்றது கிடையாது. எந்த ஒரு ஆவணத்திலும் நான் கையெழுத்திட்டது கிடையாது.

ஆழமாக கூற வேண்டும் என்றால் திமுகவின் ஆட்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடரக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கில் நான் தள்ளப்பட்டேன்.

எனது பணியின் அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் ஆவேன். அரசியல்வாதி அல்ல. இந்த வழக்கில் நான் மோசடி செய்து செல்வத்தை குவித்ததாக குற்றஞ்சட்டப்பட்டேன்.

இன்று நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன்.., நான் அரசியல் மூலம் செல்வத்தை குவிக்க நினைத்திருந்தால் எனது 20 வயதிலேயே அரசியலில் இணைந்திருப்பேன். ஆனால் நான் எனது 40களில் தான் அரசியலில் நுழைந்தேன். அதுவும் கட்சியில் ஏற்பட்ட இடைவெளியை நான் நிரப்ப வேண்டும் என்று கட்சி வேண்டியதால்…

நான் பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால் எளிதாக அமைச்சராகியிருப்பேன். நான் அமைச்சர் பதவியை நிராக்கரித்தேன். இதற்கிடையில் நான் பொய்யாக இந்த வழக்கில் இழுக்கப்பட்டேன். அது எனக்கு பயமாக இருந்தது.

தற்போது கட்சியை வலுப்படுபடுத்துவது, தமிழக மக்களுக்காக பணியாற்றுவது இதுதான் எனது எண்ண ஓட்டமாக உள்ளது.

தொடர்ந்து ஆறு வருடங்களாக எனக்கு தூணாக இருந்து ஆதரித்த எனது குடும்பம், கட்சி, தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த கனிமொழி, “சந்திப்போம்” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.

Leave a Response