விவசாயிகள் உயிரைக் கொடுத்தும் பலனில்லை – வேதனை தெரிவிக்கும் ஏர்முனை

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஞானசேகரன் (வயது55). விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் விவசாயக் கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கினார்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக தவணைத் தொகையைச் செலுத்தி வந்தார். இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தவணைத் தொகையை செலுத்த முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரை சேர்த்தது. மேலும் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி, வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் குழு என 4 பேர் ஞானசேகரன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வங்கிக் கடனை வசூலிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ஞானசேகரன் நெல் அறுவடை முடிவடைந்ததும் 2 மாதங்களில் தவணைத் தொகையை செலுத்துவதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் டிராக்டரை ஜப்தி செய்ய முயன்றனர்.

இதில் ஞானசேகரன் மற்றும் ஊழியர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஞானசேகரன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் ஞானசேகரன் பரிதாபமாக இறந்தார்.

அவருடைய மரணம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, அவருடைய உடலை வாங்க மறுக்கும் போராட்டமும் நடந்துவந்தது. அப்போராட்டம் தீர்வு ஏதும் கிடைக்காமலேயே முடிவுக்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து, ஏர்முனை இளைஞர் அணி தலைவர் வெற்றி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டம் , போந்தை கிராமத்தில் தேசிய வங்கியின் டிராக்டர் ஜப்தி நடவடிக்கையால் மரணமடைந்த விவசாயி திரு.ஞானசேகரன் அவர்களின் உடலை வாங்க மறுத்து விவசாயிகள் மற்றும் அவர் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தில் நேற்று(06/11/17) மாலை மாநில செய்தி தொடர்பாளர் திரு.புருஷோத்தமன், மாவட்ட தலைவர் திரு.சிவா உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளோடு பங்கேற்றேன்.

வங்கியில் அவர் செலுத்த வேண்டிய கடன் 7 இலட்சம் அவர் செலுத்தியது 5.25 இலட்சம் மீத கடனை அவருக்கு கரும்பு ஆலையிலிருந்து வரவேண்டிய நிலுவை தொகை 3.75 இலட்சம் மற்றும் தற்போது பயிரிட்டுள்ள நெல் சாகுபடி மூலமாக கொடுப்பதாக கூறியும் வங்கி அனுப்பிய குண்டர்களாக செயல்படும் தனியார் ஏஜென்ட்கள் ஏற்றுகொள்ளாமல் அவரை பைக்கிலிருந்து இழுத்து தள்ளியதால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களாக அவரின் உடலை வாங்க மறுத்து நடந்து வந்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கபட்டது.

வங்கி மேலாளர் மற்றும் ஏஜெண்டுகள் மீது கொலை வழக்குப் பதியவேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதாகக் கூறி போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறினர்.

இந்த முடிவு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது.

கடந்த செப்டம்பரில் பல்லடத்தில் ஜப்தி நடவடிக்கையால் மரணமடைந்த திரு.வெள்ளியங்கிரி நாதன் அவர்களின் கடனை ரத்து செய்யவும் டிராக்டரை திரும்ப ஒப்படைக்கவும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கமும் ஏர்முனையும் வங்கியில் 5 மணி நேரத்திற்கு மேல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி உத்தரவாதம் வாங்கி ரத்து செய்ய வைத்தோம்.*

ஆனால் அவரின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உறுதியளிக்கபட்டவாறு இதுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படாத நிலையே உள்ளது.

தற்போது மரணமடைந்துள்ள விவசாயி திரு.ஞானசேகரன் குடும்பத்திற்கு எந்தவிதமான நிவாரணம் கிடைக்கும் என தெரியவில்லை.இரண்டு நாட்களாக உடலைப் பெறாமல் நடைபெற்ற போராட்டம் நிவாரணத்திற்கான உத்தரவாதம் ஏதும் இல்லாமல் முடிவுக்கு வந்துவிட்டது.

பல்லாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாத பெரும் தொழிலதிபர்களிடன் கடனை வசூலிக்கத் திராணியற்ற வங்கிகள் ஏழை விவசாயிகளிடம் அத்துமீறி தனியார் ஏஜென்சி குண்டர்களை வைத்து கந்துவட்டிக் கும்பலைப் போல வசூலிப்பதை அரசாங்கம் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும்.

இறந்த விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் 25 இலட்சம் நிவாரணமாகவும், அவர் வாங்கிய அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும்.

இவண்
NSP.வெற்றி,செயல் தலைவர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.தலைவர் ஏர்முனை இளைஞர் அணி
07/11/17

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response