அழுக்கான கறுப்பான நாயகன் சுத்தமான சிவப்பான நாயகி நடித்த சாலையோரம்

எதையெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அவற்றையெல்லாம் குப்பையில் எறிந்துவிட்டு போவதுதான் நமது வழக்கம். ஆனால் அந்த குப்பையையே கதையின் கருவாக வைத்து  உருவாகியிருக்கும் திரைப்படம். அதுதான் ‘சாலையோரம்’. பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மூர்த்தி கண்ணன் இயக்கியிருக்கிறார்.
ஒரு துப்புரவு தொழிலாளிக்கும் மருத்துவர் ஒருவரின் மகளுக்கும் நடுவில் காதல் வருகிறது. ஒரு அசுத்தமும் சுத்தமும் காதலிக்கும் இந்த கதையில் யாரை யார் வென்றார்கள் என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் மூர்த்தி கண்ணன். அழகழகானநடிகர்கள் தேடி வந்து வாய்ப்புகள் கேட்டாலும், நான் என் கதைக்கு ஏற்ற ஹீரோவுக்காக காத்திருந்தேன் என்கிறார் இவர். சற்றே அழுக்கான கருப்பான அந்த ஹீரோ பல மாத தேடல்களுக்கு பின்புதான் எனக்கு கிடைத்தார். அவர்தான் ராஜ். அதைப்போலவே சுத்தம் என்கிற அடையாளத்திற்கேற்ப ஒரு கதாநாயகியை தேடினேன். பார்த்தவுடன் பளிச்சென்று என்னை கவர்ந்தார் செரீனா. ‘அஞ்சாதே’ படத்திற்கு பின் டைரக்டர் பாண்டியராஜன் வில்லனாக நடிக்கிறார். சிங்கம்புலி, முத்துக்காளை, லொள்ளு மனோகர், மலையாள நடிகர் நசீர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சென்னை புறநகரில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்குகளில் பல நாட்கள் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். சுகாதாரமற்ற காற்றுக்கும், நாற்றத்திற்கும் நடுவில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்த யூனிட்டிற்கும் நாயகன் நாயகிக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். யாரும் போகவே அஞ்சுகிற இடம் அது. என்னுடன் தயங்காமல் வந்திருந்தார்கள். சில நாட்கள் சாப்பிட மனசில்லாமல் பட்டினியோடு பணியாற்றியிருக்கிறார்கள் என்று நெஞ்சம் நெகிழ்கிறார் மூர்த்திகண்ணன்.

‘சாலையோரம்’ படத்தை ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்புராயன் தயாரிக்கிறார். சிங்கப்பூர் தமிழரான சேதுராம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவு தினேஸ் ஸ்ரீநிவாசன், பாடல்கள் யுகபாரதி, பிரான்சிஸ் கிருபா, மூர்த்திகண்ணன்.

படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வந்துவிடும் என்கிறார் இயக்குனர் மூர்த்திகண்ணன்.

குப்பை பொறுக்குகிறவனை பணக்காரப்பெண் காதலிப்பாளா?இதெல்லாம் நடைமுறை சாத்தியமா? என்று பலரும் கேட்கக்கூடிய கேள்விக்குச் சரியான விடையை இயக்குனர் சொல்லியிருக்கிறாரா என்று அப்போது பார்க்கலாம்.

Leave a Response