
தங்களது அபிமான நடிகர்களையோ, அல்லது அவர்கள் நடித்த படங்களையோ யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் போதும்.. இந்த ரசிகர்கள் பண்ற அடாவடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.. இதனால் சம்பந்தப்பட்ட நடிகருக்கு கேட்ட பெயர் ஏற்படும் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள்..
அந்தவகையில் தனது ரசிகர்கள் செய்த அநாகரிக செயலுக்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அவர்களை கண்டிக்கவும் செய்துள்ளார். என்ன செய்தார்கள் விஜய் ரசிகர்கள்..? கடந்த சில தினங்களுக்கு முன் பெண் பத்திரிகையாளர் ஒருவர், விஜய்யின் சுறா படத்தை பார்த்துவிட்டு, தான் இடைவேளையிலேயே வெளியே வந்துவிட்டதாக கூறி படத்தை கிண்டலடித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்..
ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் அந்த பெண் மீது நாகரிகமற்ற முறையில் வசைபாடி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினே இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை சீரியசானது..
இதை கேள்விப்பட்ட விஜய், தனது ரசிகர்களுக்கு அறிவுரையுடன் கூடிய உத்தரவு ஒன்றை அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.. அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..”
ஏன் ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார். இவ்வளவு தூரம் பிரச்சனை வளர்வதற்கு முன்னரே விஜய் இதில் தலையிட்டு ரசிகர்களை கண்டித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே பலரும் சொல்கிறார்கள்.


