கண்ணகி கோவிலில் கண்ணகி சிலை இல்லை!

கண்ணகி கோவில் பயணம் குறித்து
எழுத்தாளர் தேனி சுப்பிரமணியம் தரும் தகவல்கள்

குமுளியில் இருந்து கேரள அரசு அனுமதி பெற்ற ஜீப்புகளில் மட்டுமே போக முடியும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்ற போது
போக 40 ரூபாய் வர 30 ரூபாய் என்று சொன்னார்கள்.
ஆனால் திருமபி வரும்போது இரண்டுமணிக்கு மேல் ஆகிவிட்டது. இனி வேறு வண்டிகள் கிடையாது என்று சொல்லி, 180 ரூபாய் வாங்கினார்கள்.
ஆண்கள், பெண்களையும் ஒன்றாகத் திணித்து
அடைத்து வைத்துத்தான் கொண்டு வந்தனர்.

எங்களுக்கும் வேறு வழி இல்லை,
காட்டுப்பாதையில் தனியாக நடந்து வர முடியாது.

எனவே, காலை 6,7 மணிக்குள் மேலே போய்விட்டு, 11,12 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும்.
அப்போது பிரச்சினை இருக்காது.

நாம் சொந்தமாகக் கார், ஜீப் கொண்டு போக முடியாது.
நமது தேனி மாவட்ட ஆட்சியர், காவல்துறை வண்டிகளைக் கூட அனுமதிப்பது இல்லை.
அவர்களும் கேரள மாநில ஜீப்புகளில்தான் போக வேண்டும்.

15 கிலோ மீட்டர் ஜீப்பில் போக வேண்டும்
மலையில் பழக்கமானவர்கள் முழுத்தொலைவும்
நடந்தே செல்லுவார்கள்.

இன்னொரு பாதையும் உள்ளது.
கூடலூரில் இருந்து பளியங்குடி வழியாக நடந்து சென்றால் ஆறு கிலோ மீட்டர்தான். அது தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை. அதே வழியில் மீண்டும நடந்து வரலாம் என்று சொன்னார்கள். ஆனால் நான் போனது இல்லை.

இயற்கைக் காட்சிகள் அழகாக இருக்கும்.

தண்ணீர்பாட்டில் கொண்டு போக முடியாது, பிடுங்கிக் கொள்வார்கள்.
சாப்பாடு பிரச்சினை இல்லை.
தேனி கம்பத்தில் இருந்து கண்ணகி கோவில் பாதுகாப்புக் குழுவினர் பொட்டலங்களில் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்துதருவார்கள்.
கோவிலில் பாயாசம்போல ஒரு பிரசாதம் தருவார்கள்.

கடைசியாக கண்ணகி கோவிலுக்குப் போனால் அது இடிந்து கிடக்கின்றது.
கண்ணகி சிலையும் அங்கே இல்லை.
வேறு ஒரு துர்க்கை சிலை உள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்ய வந்த ஒரு தமிழ் அறிஞர்
அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு கருணாநிதியிடம் ஒப்படைத்து விட்டார் என்று சொல்கிறார்கள்.
அவருக்கு செம்மொழி மாநாட்டில் விருது கொடுத்தார்கள்.
பெயர் நினைவுக்கு வரவில்லை.

இமயத்தில் இருந்து எடுத்து வந்த கல்லால் செய்யப்பட்ட சிலை அது.

இலங்கை மன்னன் கயவாகு இங்கே வந்து வழிபட்டாராம். அதன்பிறகுதான் இலங்கையில் பத்தினித் தெய்வ வழிபாடு பரவியது.

கூகிள் இணையதளத்தில் இதுகுறித்து விரிவாகத் தகவல்கள் உள்ளன. பாருங்கள் என்றார்.

இந்தப் பயணத்தில் வர பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் இரவே கம்பத்தில் தங்கி அதிகாலையில் புறப்பட்டுப் போய்விட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் திட்டம் வகுப்போம்.

Leave a Response