தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தியில் எழுதப்பட்டு வருகின்றன. ரயில்வே நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் முதலிடத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் தார் கொண்டு அழித்ததே – அந்தப் போராட்டம் மீண்டும் நடக்கவேண்டுமா? என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அவரது அறிக்கை வருமாறு:
நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் முழு நிர்வாகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனினும் சாலைகளின் பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையகம், மாநில பொதுப்பணித்துறை, எல்லைச்சாலை அமைப்பு எனும் மூன்று அமைப்பு கள்மூலமே நிர்வகிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் நாட்டின் மொத்த தேசிய நெடுஞ்சாலையின் தூரம் சுமார் 65,600 கி.மீ.
நாட்டின் நெடுஞ்சாலைகள் அனைத்தும் இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் ஊடாகச் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்களில் அந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்த இடம் வழங்கப்பட்டு வருகிறது.
பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல பண்பாடு பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின், பன்முகத்தன்மையை நாசம் செய்யும் விதமாக, இந்துத்துவ வெறியுடன், நரேந்திர மோடி அரசு மிக மோசமான வகையில் செயல்பட்டு வருகின்றது.
தமிழ் நாட்டின் எல்லை வட மேற்கு நகரங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஊர் பெயரைச் சுட்டிக்காட்டும் மைல்கற்களில் ஆங்கிலத்தை அகற்றி விட்டு முதலில் இந்தி – இரண்டாம் இடத்தில் தமிழ் எழுதப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 75, 77 எனும் சாலைகள், வேலூர், திருவண்ணாமலை வழியாகச் செல்லும் வழியில் தற்போது இந்தி, தமிழ், கன்னட எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில எழுத்துகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. 533 கிலோ மீட்டர் தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை 75, கர்நாடகாவில் பந்த்வா என்ற இடத்தில் தொடங்கி வேலூர் வரை வருகின்ற தேசிய நெடுஞ்சாலை 73 ஆவது சாலையில் இணைகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல், சித்தூர், வேலூர் நெடுஞ்சாலையில் ஆங்கில எழுத்துகள் அழிக்கப்பட்டு, இந்தியில் எழுதப்படுகின்றது
பாஜக ஆட்சிக்கு வந்ததுமுதல் மத்திய அரசு விளம்பரங்களில் இந்தி ஆதிக்கம் தலை தூக்கி நிற்கிறது. முக்கியமாக ரயில்வே துறை விளம்பரங்கள் தொடர்ந்து இந்தியில் வெளியிடப்படுகின்றன. இது பல முறை விடுதலை நாளிதழிதழில் சுட்டிக்காட்டப்பட்டும் உள்ளது. மேலும் வானொலி, தொலைக்காட்சிகளில் வரும் அரசு விளம் பரங்களும் இந்தியிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், ஏழைகள் வீட்டுவசதித் திட்டம், பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டம் போன்றவை ஸ்வட்ச் பாரத், கரீப் ஆவாஸ் யோஜனா, ஜன் தன் என்ற பெயரிலேயே விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே ஊடுருவும் நோக்கத்திலேயே இந்தி வார்த்தைகள் அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
1997 ஆம் ஆண்டு வாஜ்பேயி அரசின் காலத்தில் தமிழகத்தில் சுற்றுலாத் தளங்களில் இந்தி எழுத்துக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் கைவிடப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது – தாம்பரத்தில் நெடுஞ்சாலையில் இப்படித்தான் இந்தி இடம் பெற்றது. திராவிடர் கழகம் கண்டித்து அறிக்கை விட்டதால், உடனடியாக நீக்கப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2004 டிசம்பரில் மத்திய நெடுஞ்சாலைத் துறையின்கீழ் வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழில் மைல் கற்களை வைப்பதற்குப் பதில் இந்தியில் மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டோம்.
அன்றைய சாலைப் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினார் என்பதை நினை வூட்டுகிறோம்.
தமிழக பாஜக பிரமுகர்கள் கூறும் போது தமிழகத்தில் தமிழ் இருக்கலாம்; தமிழகம் இந்தியாவில் உள்ளது. அப்படி என்றால் இங்கே இந்தி இருப்பதில் தவறில்லை என்று துணிச்சலுடன் தொலைக்காட்சி விவாதங்களில் பேசிவருகின்றனர்.
இதுதான் இவர்களின் அடையாளம். தமிழ்நாட்டு மக்கள் ஏன் புறக்கணிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால், அதன் விளைவை பா.ஜ.க. அனுபவித்துத்தானே தீரவேண்டும்.
1952, 1953, 1954 ஆண்டுகளில் இரயில்வே நிலைய பெயர்ப்பலகைகளில் முதல் இடத்தில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்தியதன் விளைவாக தமிழுக்கு முதலிடம் நடைமுறைக்கு வந்தது. மீண்டும் அத்தகைய போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தவேண்டுமா? தார் சட்டியைக் கையில் ஏந்த வேண்டுமா?
வீண் வம்பு வேலையில் மத்திய அரசு இறங்க வேண்டாம், எச்சரிக்கை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.