சிங்கள இராணுவம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் – ஐநா ஆணைய தலைவர் கண்டனம்

போர்க் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சர்வதேச விசாரணை கோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் முறையிடப்பட்டது.

அதையடுத்து, இலங்கை அரசே விசாரணைக் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஐ.நா அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணைய அமர்வின் கூட்டத்தில் ஆணைய தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் உரையாற்றினார். அப்போது அவர் ,”இலங்கையில் போர்க் குற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை. போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை. இலங்கை போர்க் குற்றம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த சர்வதேச நீதிபதிகள் உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று இலங்கை தரப்பில் ஐ.நா.விடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும், தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யவும் வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மந்தமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் கண்டனம் தெரிவித்திருந்தது.

Leave a Response