அதிரடி போராட்டம், அதிர்ந்த கிரண்பேடி – புதுச்சேரி பரபரப்பு


நீட் தேர்வில் இருந்துப் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி ‘நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு’ சார்பில் தொடர்ந்துப் போராடி வருகிறோம். இந்நிலையில், சுகாதார துறை இயக்குநரகம் சார்பில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்றைய முன்தினம் (1.3.2017) இதுகுறித்து விளக்கம் கேட்க சுகாதார துறை இயக்குநரும், நீட் தேர்வுக் குழுத் தலைவருமான இராமன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்றோம். அப்போது அவர் ‘என்னிடம் எதுவும் கேட்காதீர்கள், அமைச்சரிடம் கேளுங்கள்எ’ எனக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால், கோபமடைந்த அரசியல் கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் சுகாதார இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் கிரண் பேடி இதுவரையில் கோப்பில் கையெழுத்துப் போடாமல் வைத்துள்ளார் எனவும் தகவல் கிடைத்தது. உடனே அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டோம். அப்போது அவ்வழியாக வந்த சுகாதார துறை இயக்குநரின் காரையும் சிறைப் பிடித்தோம். இதனால், போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ஆளுநர் கிரண் பேடி அக்கோப்பில் கையெழுத்திட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைத்து ஊடகங்களும் இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.

Leave a Response