
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின்
அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது.
இது மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும்அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களைப் பாதிப்பதாகவும் உள்ளது.
இந்தப் புதிய அபிவிருத்திச்சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளது.
முல்லைத்தீவில் கூட்டுறவு உதவி ஆணையாளர் பணிமனைக் கட்டிடத் திறப்புவிழா நேற்று புதன்கிழமை (01.02.2017)நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன்இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் அதற்கு முன்னதாக அவசரம் அவசரமாக நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையான அபிவிருத்திச் சட்டம் இலங்கையை அபிவிருத்திப் பாதையில் விரைந்து முன்னேற்றுவதற்காகவே கொண்டு வரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதற்கான சட்டமூலத்தை நாங்கள்நிராகரித்திருப்பதால் வடக்கு மாகாணசபை அபிவிருத்திக்குத் தடையாக உள்ளது என்று அரசு தரப்பு எங்களைக் குற்றம்சாட்டக் கூடும்.
அபிவிருத்திக்கு நாங்கள் ஒருபோதும் தடையானவர்கள் அல்லர். அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம்என்ற ரீதியில் அபிவிருத்தித் திட்டங்களை இருகை கூப்பி வரவேற்பதற்குத் தயாராகவே உள்ளோம். ஆனால்அபிவிருத்தியின் பெயரால் தமிழ்மக்களின் உரிமைகளை மாகாணசபைக்கிருக்கும் அற்ப சொற்ப அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை அரசாங்கம் அந்நிய முதலீடுகளையும் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும் நோக்கில் தேசியக் கொள்கையொன்றை உருவாக்க இருக்கிறது. இதன்படி வடகிழக்குப் பொருளாதார வாயில், தென்மேற்குப் பொருளாதார வாயில், மலைநாட்டு
உபபொருளாதார வாயில் என்று இலங்கை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள்முன்னெடுக்கப்பட உள்ளன. அவற்றை அமுலாக்குவதற்கு நிலையான அபிவிருத்திப் பேரவை ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.
அபிவிருத்திப் பேரவையில் 11 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவர்களில் மூன்று பேர் மாத்திரமே மாகாணசபைகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இலங்கையில் உள்ள ஒன்பது
மாகாணங்களும் ஒவ்வொருவரைப் பெயர் குறிப்பிட்டுப் பிரநிதியாக்க வேண்டும். இவர்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்சுழற்சி முறையில் மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வார். இம்முறையில் அபிவிருத்திப்பேரவையில் வடக்கு கிழக்குக்கான நிரந்தர உறுப்புரிமை இல்லை.
சுழற்சி முறையில் கிடைக்கின்ற பிரதிநிதித்துவமும் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.
எமது மாகாணத்தின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையிலேயே அபிவிருத்திப் பேரவை எமது மாகாணத்தின் திட்டங்களைத்தீர்மானிக்கும் வகையிலேயே நிலையான அபிவிருத்திச் சட்டமூலம் வரையப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது
விருப்புத்திட்டங்களை எமது மாகாணத்தில் திணிப்பதற்கு வழிவிடு என்று எங்களைப் புறந்தள்ளி விடுகின்ற சட்டமூலமாக இது உள்ளதேயல்லாமல் என்ன தேவை என்று வழிகாட்டுங்கள் என்று எங்களைக் கேட்கும் சட்டமூலமாக இல்லை.
அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களைப் பலவீனப்படுத்தும் இந்த நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை நாங்கள்நிராகரித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.


