ஜல்லிக்கட்டுக்காக தன்னந்தனியே தமிழகத்தைச் சுற்றும் பெண் என்ன சொல்கிறார் தெரியுமா?

புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஜல்லிக்கட்டு ஆர்வலர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி துள்ளுந்து (மோட்டார் சைக்கிள்) மூலம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இவர் சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு வழியாக சனவ்ரி 4 அன்று மதுரை சென்றார்.

பின்னர் அவர் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வாடிவாசலை பார்ப்பதற்காகச் சென்றார். அவருடன் மதுரைப் பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உடன் சென்றனர். இந்தத் தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் அவர்களை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மகேஸ்வரியைக் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மகேஸ்வரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது,

காளை இனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு அவசியம் நடத்த வேண்டும். அதற்கு, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராகச் சென்று விழிப்புணர்வு செய்து வருகிறேன். எனது பிரசாரத்துக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பு கிடையாது.

எனது பிரசாரம் குறித்து முகநூலில் குறிப்பிட்டு உதவிகள் கேட்டிருந்தேன். அதன்மூலம் தான் நான் போகின்ற இடத்தில் எல்லாம் உதவி செய்கிறார்கள். தற்போதும் அலங்காநல்லூருக்கு வழிகாட்டுவதற்காக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்தனர். ஆனால் நாங்கள் ஊர்வலமாகச் செல்வதாக கருதி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னைக் கைது செய்துள்ளனர்.

நான் தனிநபராகத் தான் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். மதுரையில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்று அங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர் வழியாக புதுச்சேரியை அடையத் திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் காவல்துறையினர் அவரை விடுவித்தனர். தொடர்ந்து அவர் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார்.

Leave a Response