போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும்- சீமான்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது:

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் உணர்வுகளை அரசுத் தரப்பு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் நடப்பது நடக்கட்டும் என்கிற மனநிலைக்கு அரசுத்தரப்பும் தொழிலாளர்கள் தரப்பும் வந்துவிடக்கூடாது. இந்தப் போராட்டம் நீடிப்பதால் பொதுமக்களின் அன்றாட அலுவல்களும் வாழ்க்கைச் சூழலும் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை இரு தரப்பும் மனதில் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளை அதன் நியாய தர்மம் பார்த்து உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க மாண்புமிகு முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். போக்குவரத்துக்கு வழியில்லாமல்  மக்கள் திண்டாடும் நிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் உணர்வறிந்து அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சி, அத்தகைய போராட்டங்களில் ஒருபோதும் வன்முறையோ அடாவடியோ தலைதூக்கிவிடக் கூடாது என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. ஒருசில இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக வழியிலான போராட்டங்கள் மூலமாக மட்டுமே போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் உணர்த்த வேண்டுமே தவிர, கட்சி பாகுபாடுகளையோ வன்முறை தீர்வுகளையோ மனதில் கொண்டு செயல்படவே கூடாது.

வெளியே செல்ல முடியாமலும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் அவதிப்படும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உடனடி தீர்வை அரசு செய்து கொடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களும் அரசுத் தரப்புடன் இணக்கமாகி பழையபடி தங்களின் பணியை உடனடியாகத் தொடங்கி மக்களின் அவதிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில்  சீமான் கூறியுள்ளார்.

 

Leave a Response