
இயக்குனர் கே.வி.ஆனந்த் விஜய்சேதுபதியை வைத்து தான் இயக்கிவரும் படத்திற்கு ‘கவண்’ என பெயர் சூட்டியுள்ளார். வழக்கம்போல தூய தமிழ்ல் பெயர் வைப்பதில் இருந்து தான் மாறவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜிடம் இருந்து மாறி, ஹிப்ஹாப் தமிழாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது இன்னொரு ஆச்சர்யம்..
இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின் பாடகி என்பது பலருக்கு தெரிந்திராத விஷயம். டி.ராஜேந்தர் நன்றாக பாடுவார் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.. அந்தவகையில் டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து இந்தப்படத்தில் பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும் என்கிறார்கள். இந்தப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


