தேடி வரும் பிரதமர் பதவியை மறுக்கும் தமிழர்

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் தேர்வுக்கான போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், யாகூ இணையத்தளத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகமென கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது.

அதன்படி, தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போது துணைப்பிரதமராக இருக்கும் தர்மன் சண்முகரத்தினம் தான் வரவேண்டுமென பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்த நிலையில், மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 விழுக்காட்டினரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட் 25 விழுக்காட்டினரும், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இற்கு 24 விழுக்காட்டினரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இச்செய்தி பரபரப்பாக எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய தர்மன் சண்முகரத்னம்,

என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன்.

அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் பதவியை ஏற்க எனக்கு தகுதியில்லை எனக் கருதுகிறேன்.

எனவே, அரசாங்கமானது நாட்டின் வலுவான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, நீண்டகால அடிப்படையில் சிந்தித்து சிறந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமராகும் தமிழர் என்று உலகம் அவரைக் கொண்டாடுவதோடு அவருக்குத்தான் அடுத்த பிரதமர் வாய்ப்பு என்று அரசியல் நோக்கர்களும் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவரே அதை மறுத்திருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response