மருத்துவமனையில் இன்னும் இரண்டுநாட்கள் இருப்பார் ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா செப்டம்பர் 22 இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருக்கிறார். நேற்று காலை மற்றும் மதிய உணவுகளை வழக்கம்போல் சாப்பிட்டார். மதியம் சற்றுநேரம் தூங்கி ஓய்வெடுத்தார். மாலையில் சற்றுநேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனை 2-வது தளத்தில் இருக்கும் மல்டி டிஸ்பிளினரி கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் உள்ள 2008-ம் எண் கொண்ட அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரை, மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று மதியம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டதற்கான மருத்துவ கோப்புகள் எடுத்துவரப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவிடம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேற்று மாலை 5 மணி அளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேலும் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி அவர் சிகிச்சை பெறுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ரத்தம், ஸ்கேன் பரிசோதனை உள்பட மொத்தம் 12 பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் ஒரு சில முடிவுகள் மட்டுமே தற்போது வந்துள்ளது. ஒரு சில முடிவுகள் வருவதற்கு 48 மணி நேரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இன்று(சனிக்கிழமை) இரவு மொத்த பரிசோதனை முடிவுகளும் மருத்துவர்கள் கையில் கிடைக்கும். அதன்பிறகு மேற்கொண்டு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோதான் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என தெரிகிறது.

Leave a Response