கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?

சர்வதேச காணமல் போனோருக்கான நாளை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவை வலியுறுத்தி சென்னையிலுள்ள UNICEF அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி மற்றும் மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆகஸ்ட் 30 அன்று மனு கையளிக்கப்பட்டது.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  டைசன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்  திருமுருகன் மற்றும் லெனா குமார் ஆகியோர் இந்த மனுவினை UNICEF அலுவலகத்தில் கையளித்தனர்.

அதில்,

இறுதிக் கட்டப் போரின் போதும், அதற்குப் பின்பும் ஏராளமான தமிழர்கள் இலங்கையில் காணாமல் போயுள்ளனர். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் என பலரின் நிலையும் கேள்விக் குறியாக இருக்கிறது. போர் முடிந்து 7 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டோரின் நிலை குறித்தும் அவர்களின் குடுமபத்தினருக்கு தெரியாமல் இருக்கிறது. தமிழர்கள் காணாமல் போகிற நிகழ்வு என்பது இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.

போர்க்கைதிகள் பட்டியலில் இருந்த தமிழ் ஊடகவியலாளர் இசைப் பிரியா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பின்னாட்களில் தெரிய வந்தது. இதே போன்று கவிஞர் புதுவை ரத்தினதுரை, பாலகுமாரன், எழிலன் உள்ளிட்டோர் நிலை என்ன என்று தெரியாதததாக இருக்கிறது. இறுதிப் போரின் போது 16,000 பேர் போர்க்கைதிகளாக காணமல் போனதாக ICRC அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2011 மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் தேதிக்கு முதல் நாள் காணாமல் போனோர் குறித்து செயலாற்றி வந்த இரண்டு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து செயலாற்றியவர்கள். ( http://groundviews.org/2011/12/19/disappearance-of-human-rights-defenders-political-activists-lalith-kumar-weeraraj-and-kugan-murugan-on-9th-december-2011/ )

இதே போன்று 2014இல் காணாமல் போன தனது மகனுக்காக போராடிய திருமதி. ஜெயக்குமாரி இலங்கை அரசினால் பயங்கரவாதிகள் என்கிற பெயரில் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கையின் பிரதமர் இரணில் விக்ரமசிங்கே ”காணாமல்போனார் எல்லாம் உயிருடன் இருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை மேலும் அதுகுறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென்று” சொல்லியிருக்கிறார்.

அதைப்போலவே இலங்கையின் அதிபர் மைத்திரிபாலசிறீசேனா விசாரணை ஆணையம் அமைக்கும் முன்னமே ”இலங்கை படையினர் மீது வரும் எந்தவொரு பலியையும் என் அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதென்று” திட்டவட்டமாக பேசியிருக்கிறார்.

இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இப்படி சிங்கள ஆட்சியாளர்கள் மாறினாலும் காணாமல் போனார் பற்றிய உண்மையை மறைப்பதில் அனைத்து ஆட்சியாளர்களும் ஒரே நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். எனவே தான் இந்த காணாமல் போனோர் ஆணையம் வெறும் கண் துடைப்பு நாடகமே. எனவே உள்நாட்டு விசாரணை என்பதோ கலப்பு விசாரணை முறை என்பதோ இலங்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை. வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப் போவதில்லை என்றும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதியை மறுத்து வருகிறது.

கடந்த ஆண்டு பான் –கி-மூன் சிரியாவுக்கு அறிவித்ததைப் போன்று இலங்கை அரசின் மீதும் சர்வதேச விசாரணை கமிசன் அறிவிக்கப்பட வேண்டும். இதுவே சர்வதேச நடைமுறை, மற்றும் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட நீதிமுறை. இந்த நடைமுறையை உடனடியாக ஐ.நா தனது விதியினைப் பயன்படுத்தி செயல்படுத்தி இலங்கை அரசின் மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டு வருவது மட்டுமே காணாமல் போன தமிழர்களுக்கான நீதியை பெற்றுத் தரமுடியும்

. அதே சமயம் ஈழத்தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பினை நடத்தி, தமிழீழநாடு அமைக்கப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் பயமின்றியும், உயிர் அச்சமின்றியும் வழக்கு பதியவோ, சாட்சியங்கள் கொடுக்கவோ முன்வருவார்கள். பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியங்கள் கொடுப்பவர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே எந்த விசாரணை முறையும் நீதியை பெற்றுத் தரும்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Response