
இன்றைய அரசியல் சூழலில் சாமன்ய மனிதன் சந்திக்கும் அவலங்களை நெத்தியடியாக சொல்லியிருக்கிறது ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம். நேர்மையான அரசியல் தலைவர் என பெயரெடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் நல்லகண்ணு, சமீபத்தில் வெளியான ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு “அரசியல்வாதிகளையே கண்ணீர் விட வைத்துவிட்டது என கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நெகிழ்ச்சியுடன் பேசிய நல்லகண்ணு, “பொதுவாக அரசியலில் நடக்கும் விஷயங்களை பார்த்து பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு கண்ணீர் வாராது. ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வீரமணி, ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அழுதனர், நானும் அழுதுவிட்டேன்” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, “கழிவறை இல்லாததால் கல்யாணமாகி வந்த பெண் திரும்பி பிறந்த வீட்டுக்கே சென்ற அவலமும் இந்த நாட்டில் தான் நடந்தது. கழிவறை கட்டுவதிலும் ஊழல் செய்யும் நாடு இது. நாங்கள் 20 ஆண்டுகளாக மணற்கொள்ளை, குடிநீர் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்காக போராடி இருக்கிறோம் அதில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் ‛புளோரைடு’ கலந்து வரும் தண்ணீர் குறித்த போராட்டம், அந்த பிரச்சனை குறித்தும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது” என தொடர்ந்து படத்தில் காட்டப்பட்ட சமூக அக்கறையை பாராட்டி பேசினார்..


