அப்பா வேணாம்பா- திரைவிமர்சனம்.


மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைக் கண்டு ஒதுங்கிப்போகிறவர்கள் பலர், குடிகாரர்கள் என்று இழிவுபடுத்துகிறவர்கள் சிலர், ஆனால் அப்பாவேணாம்பா படத்தின் இயக்குநர் வெங்கட்ரமணனோ அவர்கள் குடிநோயாளிகள் என்றும் அவர்கள் மீது இந்தச்சமுதாயம் பரிவு காட்டவேண்டும் என்று சொல்கிறார்.
சமுதாயத்தில் மதிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குடிக்கு அடிமையானதன் விளைவு அவருடைய வேலை போகிறது, குடும்பம் கடனில் மூழ்குகிறது. இது தொடர்கதையாவதால் குடும்பம் அவரை விட்டுப் பிரிகிறது. அதன்பின்னர் மதுப்பழக்கத்திலிருந்து விடுவிடுக்கும் அமைப்பு ஒன்றின் மூலம் அவர் திருந்துகிறார் என்பதுதான் இந்தப்படம்.
படத்தின் இயக்குநர் வெங்கட்ரமணனே நாயகனாக நடித்திருக்கிறார். இதனால் படம் முழுவதும் அவரே வருகிறார். அவருடைய மனைவி, குழந்தைகள், மைத்துனர் மற்றும் குடிநோயாளிகளின் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று படத்தில் குறிப்பிட்த்தக்க பாத்திரங்கள்தாம் இருக்கின்றன.
இடைவேளைவரை ஒருவன் குடிக்கு அடிமையானதால் ஏற்படும் விளைவுகளை விளக்கிச் சொல்லுகிற படம் இடைவேளைக்குப் பிறகு அதிலிருந்து அவன் விடுபடும் நிலை அதன்முறை ஆகியனவற்றை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
படத்தில் நாயகன் மற்றும் குடிநோய் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் வானொலிநாடகம் போலப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இவற்றில் சில வசனங்கள் கைதட்டி ரசிக்கவைக்கின்றன. பல வசனங்கள் திரும்பத்திரும்பப் பேச்சப்படுவதால் போரடிக்கிறது.
இந்தத் திரைஊடகத்தின் மூலம் சமுதாயத்துக்கு நல்லகருத்துகளைச் சொல்லிவிட வேண்டும் என்கிற இயக்குநரின் எண்ணம் வரவேற்கப்படவேண்டியது. நோய்நாடி நோய்முதலநாடி என்னும் குறளுக்கேற்ப இன்றைய நிலையில் இந்த மதுவை, மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே மதுவிற்பனை செய்து மக்களைச் சீரழியவைப்பது பற்றி எந்த இடத்திலும் பேசாமல் விட்டிருப்பது குறையாக இருக்கிறது.

Leave a Response