தமிழின், தமிழரின் பெருமையைஎடுத்துச் சொல்லும் ‘பொன்னியின் செல்வன்’.

 

வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது..

இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா.

அவரைச் சந்தித்த போது …

இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை படமாக்கக் காரணம் என்ன?

அதற்கு அவ்வளவு வாசகர்கள் ,ரசிகர்கள் இருக்கிறார்கள். . தனிப்பட்ட முறையில் எனக்கு அந்நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நானே ஐந்து முறை படித்துள்ளேன் அவ்வளவு அற்புதப் படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன்.இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த கட்டத்துக்குக் எடுத்துச் செல்லும் முயற்சிதான் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்.

இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப் படுமா?

சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள். இதை இக்காலச் சூழலில் எடுக்க உகந்த காரணங்கள் உண்டு. தற்போதைய தமிழ் இளைஞர்கள் தமிழின்பெருமையை, தமிழரின் பெருமையை வரலாற்றை மரபை ,பாரம்பரியத்தை அறியாமல் இருக்கிறார்கள்.இதை அப்படியே விட்டால் எல்லாம் மறக்கப்பட்டு விடும்.

தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் சோழர்கள் ஆண்ட காலம், தமிழகத்தின் பொற்காலம். சோழமன்னர்களில் வீரத்திலும் மக்கள் நலனிலும் இறை பக்தியிலும் சான்றோரைப் போன்றுவதிலும் தன்னிகரற்று விளங்கிய மன்னன் இராஜாராஜசோழன். அவன் அரியணை ஏறிய வரலாற்றை அழகுடன் வரலாற்று உண்மைகளுடன் கல்கியால் புனையப்பட்ட காவியம்தான் பொன்னியின் செல்வன். இதைப் படைப்பதன் மூலம் அன்றைய தமிழரின் வரலாறு பாரம்பரியம் விளங்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய இளைய சமுதாயம் பழம் பெருமையை புறக்கணிக்கிறதே..?

இன்று இளைய சமுதாயத்தினரில் பலர் வரலாறு அறியாமல் இருக்கிறார்கள்.  இந்த முயற்சியின் மூலம் நாங்கள் கூறுவது தமிழர் பெருமைதான். இது வெறும் தற்பெருமையல்ல; தக்க பெருமைதான் என்று உணர வைப்போம். இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறோம்.

அனிமேஷன் படமாக்கும் போது எதை முக்கியமாக கவனிக்க வேண்டியிருக்கிறது?

‘பொன்னியின் செல்வன்’காவியம் 2500 பக்கங்கள் கொண்டது.

‘பொன்னியின் செல்வன் கதையின் கருத்தும் கரையாமல் ,நோக்கும் போக்கும் நோகாமல் ,தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம்  சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.

தொழில்நுட்பத்தில் இதை எப்படி செழுமை செய்வீர்கள்?

சாதாரண திரைப்படமாக எடுக்கும் போது செலவு , பலவிதமான கேரக்டர்கள் உள்பட பல தடைகள் குறுக்கே நிற்கும். அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சிறப்பாக காட்டி செழுமை சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர். உருவங்கள். பாத்திரங்கள்,குணச்சித்திரங்கள் உருவாக்குவதில் தனக்கென தனிப்பெயர் பெற்றிருப்பவர்.  அவர்தான் இதை அனிமேஷன் வடிவத்தில் இயக்குகிறார். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்கபலம் திரைவடிவ முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.

என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும்?

நாவல் வடிவத்தை திரைப்பட வடிவம், அதுவும் 2 டி அனிமேஷன் திரைப்பட வடிவமாக மாற்றுவதே பெரிய சவால். கதை படிக்காதவர்களையும் படம் பார்க்கும்படி சுவாரஸ்யப் படுத்துவது அடுத்த பெரிய சவால்தான். எம் முடன் அத்துறை வல்லுநர் குழு இருப்பதால் இதை எங்களால் எதிர்கொள்ள முடியும். கல்கியே ஓர் இயக்குநர். அவரே ஒரு கலை இயக்குநர். அவரே ஒரு வசன கர்த்தா. அவரே ஒரு திரைக்கதையாசிரியர்,காட்சிப் படுத்துபவர் என்பதை அந்தக் கதை படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே எங்களது பல வேலைகளை அவரே செய்து விட்டார். வடிவ மாற்றம் ஒன்றே பெரிய வேலை. படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம். வளமான தமிழகம் ஆதரவுடன் ‘பைவ் எலிமெண்ட்ஸ்’  நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது.

Leave a Response