
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் விதமாக,தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஒன்றியஅரசு ஈடுபட்டு வந்தது.இதனால்,தென்மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படும் என திமுக கூட்டணிக்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தன.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அப்போதைய முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
இதுபோன்ற சூழலில்,பாஜகஅரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை செய்வதற்கான மசோதா உள்ளிட்ட மசோதாக்களை கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.ஆனால், மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்பட்டது.திமுக முன்னெடுப்பு காரணமாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தன.குறிப்பாக அப்போது மக்களவையில் இருந்த 528 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும்,எதிராக 230 வாக்குகளும் பதிவானதால் அந்த மசோதா தோல்வியடைந்தது.
இந்நிலையில் தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்முடிவுகள் மற்றும் மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணியில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏக்னாத் ஷிண்டே பக்கம் தாவியது உள்ளிட்ட காரணங்களால் இப்போது கொண்டுவந்தால் நிறைவேற்றிட முடியும் என கணக்கு போடுகிறது.
இதனால் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலியே இந்த சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வருகிறார்களா,அதில் என்ன இருக்கிறது,மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவுமே வெளியாகவில்லை.
இந்தநிலையில் சென்னை வந்திருந்த இராகுல்காந்தி, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று சம்பந்தமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார்.
இராகுலின் பேச்சைத் தொடர்ந்து,தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார்.இதற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது.
திமுகவை பொறுத்தவரை 22 மக்களவை எம்பிக்களும், மாநிலங்களவை உறுப்பினர் 8 பேர் என 30 எம்பிக்கள் உள்ளனர்.காங்கிரசுக் கட்சியை பொறுத்தவரை 9 மக்களவை உறுப்பினர்களும்,3 மாநிலங்களவை உறுப்பினர் என 12 பேர் உள்ளனர்.அதிமுகவில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிகவில் தலா 2 மக்களவை உறுப்பினர்களும்,மதிமுகவில் ஒரு மக்களவை உறுப்பினரும்,ஐயுஎம்எல்லில் 1 மக்களவை உறுப்பினரும்,பாமக,தேமுதிக,மநீமவில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் விஜய் கூட்டியுள்ள எம்பிக்கள் கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக புறக்கணிப்பதாக அறிவித்தது.அதேபோன்று,அதிமுகவும் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை என்று அறிவித்தது.
இந்தநிலையில்,சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீமவைச் சேர்ந்த எம்பிக்கள் புறக்கணித்தனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 57 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.தொகுதி மறுவரையறை மசோதாவை பற்றி எந்த தகவலும் இல்லாத சூழ்நிலையில் எம்பிக்கள் கூட்டத்தில் எதைபற்றி விவாதித்து,என்ன முடிவு எடுக்கமுடியும் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.மசோதாவில் என்ன கொண்டுவரப் போகிறார்கள் என்பதே தெரியாத போது கற்பனையாக ஒன்றை உருவாக்கி அனைத்து கட்சி எம்பிக்களை முதல்வர் விஜய் கூட்டியது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது
காவிரி,மேகதாது அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல்,தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தவெக அரசு ‘அரசியல் நாடகம்’ நடத்துவதாக திமுக குற்றஞ்சாட்டியது.
திமுக எம்பி கனிமொழி,தொகுதி மறுவரையறை கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழகத்தின் உயிர் பிரச்னையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுகவின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார்.
எனவே,தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்காது.மாநிலத்தின் வாழ்வாதார பிரச்னை புறந்தள்ளப்படும்போது,இந்த அவசரக்கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த நியாயமும் இல்லை என கூறியிருந்தார்.
திமுகவை தொடர்ந்து அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அடுத்தடுத்து அறிவித்தன.
இந்தநிலையில், திமுக, அதிமுகவை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்பிக்களும், மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும்,பாமகவின் அன்புமணி,தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.அதேவேளையில்,காங்கிரசுக் கட்சியின் 12 எம்.பி.,க்களும் விசிக – 2, இந்திய கம்யூ – 2, மார்க்சிஸ்ட் – 2, மதிமுக, ஐயுஎம்எல் தலா ஒரு என எம்.பி. மொத்தமாக 19 எம்பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கர்நாடகத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் காங்கிரஸ் எம்பி சுதா இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன்,கம்யூனிஸ்ட்டின் சு.வெங்கடேசன்,சச்சிதாநந்தம்,சுப்பராயன், செல்வராஜ்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நவாஸ் கனி,காங்கிரசின் ஜோதிமணி,மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில்,பிரவீன் சக்கரவர்த்தி,ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்,விஜய் வசந்த்,விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக் என 19 எம்பிக்கள் மட்டுமே அரங்கில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்த மொத்த புறக்கணிப்பு, தவெக அரசுக்கு கிடைத்த முதல் பெரிய அரசியல் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய்யுடன் நெருக்கம் காட்டிய கமல்ஹாசன்,இந்தக்கூட்டத்தைப் புறக்கணித்ததும் பேசுபொருளாகியுள்ளது.


