
விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை….
தமிழ்நாட்டில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை,மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியாத ஒரு சம்பிரதாய அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.
தமிழக அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் கொண்ட நிதிநிலை அறிக்கையானது சாமானிய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட,தவெகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை,விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி, மகளிருக்கு அனைத்து இடங்களுக்கும் சென்றுவர இலவசப் பேருந்துப்பயணம்,வேலையில்லாப் பட்டாதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்கள் இடம்பெறாமல் போனது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே கொண்டுவந்த தாலிக்குத் தங்கம்,விலையில்லா மடிக்கணினி திட்டம், அம்மா பசுமை இல்லம் திட்டம்,பள்ளி மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம்,மாணவர் தங்கும் விடுதி, ஏழைப்பெண்களுக்கு கறவை மாடுகள்,ஆடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் இன்றைக்கு புதியபெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகள் விடுபட்டுள்ளது.
தவெக அரசு மாவட்டம்தோறும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவை உருவாக்கியபோதும்,தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இன்னும் குறையாமல் இருப்பது வேதனையளிக்கிறது.வீடுகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்தபோதிலும்,3 இலட்சத்திற்கும் அதிகமான மின்இணைப்புகளில் அதிகம் மின்கட்டணம் வசூல் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பல இன்னல்களுக்கு நாள்தோறும் ஆளாகி வருவதைச் சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசு டெண்டர் நடைமுறைகளில் ஒரு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது,717டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளை மூடியிருப்பது வரவேற்கத்தக்கது.அதேசமயம் இந்த ஆட்சி பொறுப்பேற்றுள்ள மூன்று மாதங்களில் ரூ.22,000 கோடி கடன் பெற்றுள்ளதும்,நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடன் சுமை 10,98,768 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பல்வேறு சவால்கள்,நெருக்கடிகள் இருந்தபோதும் நிதி மேலாண்மையை திறம்பட செய்ததோடு,தமிழக மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றியதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களைக் கடந்துவிட்ட தவெக அரசு வரும்காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும்,கவனமுடனும் செயல்பட்டால்தான் மாநிலத்தின் வருவாயை அதிகரித்து,நிதிநிலையைச் சரிசெய்யமுடியும்.அதேசமயம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தவறாமல் நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


