சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காத ஜெயலலிதா மதுவிலக்குக் கொண்டு வருவாரா? – சீமான் கேள்வி

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரியை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. நீங்கள் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நமது வருங்கால சந்ததியினரை நினைத்து பார்க்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்.

கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்து, அனைவருக்கும் தனித்திறன் கல்வி கற்றுக்கொடுக்கப்படும். அரசின் புறம்போக்கு நிலங்கள் மாட்டுப் பண்ணைகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றப்படும். ஜெர்சி மாடுகளுக்கு தடை விதித்து, நாட்டு மாடுகள் வளர்க்கப்படும். வலிமைமிக்க ஆட்சியைக் கொடுக்க இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் தான் மது கொண்டு வரப்பட்டது. மதுவுக்கு எதிராக போராடி உயிர்நீத்த சசிபெருமாளுக்கு ஜெயலலிதா இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தற்போது அ.தி.மு.க. படிப்படியாக பூரண மதுவிலக்கு என கூறுவது, தேர்தல் அறிவிப்பாக தெரிகிறது. நம்ப முடியவில்லை. நதிநீர் பங்கீட்டு முறை தேசிய மயமாக்கப்பட வேண்டும். கூட்டணி எனக்கு முக்கியமில்லை. கொள்கை தான் முக்கியம். வருகிற உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.

மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும். கட்சிகளுக்கு ஒரே சின்னம் வழங்குவது, முழுமையான ஜனநாயகம் இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்சிகளுக்கு சின்னங்கள் மாற்றி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response