ஜெயலலிதா பரப்புரைக் கூட்டங்கள் என்ன திறந்த வெளி சித்ரவதைக் கூடங்களா? – கொதிக்கும் ஆர்வலர்கள்

தேர்தல் பரப்புரை என்றால் அனல் பறக்கும் என்பது அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கொளுத்தும் கோடை வெயிலில் காசு கொடுத்து கூட்டி வந்து,  மனித உயிர்களைக் கருக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பரப்புரை நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்புடன் காரசார விவாதங்கள் அரங்கேறி வருகிறது.

அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் இது போன்று நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பிரசாரக் கூட்டங்கள் அதிலும்,முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுப் பேசும் கூட்டம் என்றால் அதற்கு மக்களை,கட்சிக்காரர்களை அழைத்து வந்து மாஸ் காட்டும் அதிமுக பிரமுகர்கள், ஜெயலலிதா மேடையில் ஏறும் முன்பாக, அதுவும் அவரின் வருகைக்கு  பல மணி நேரத்திற்கு முன்பாகவே மண்டை காயும் வெயிலில் அமர வைத்து,  தங்களின் ‘அம்மா பக்தி’ யை காட்ட வேண்டுமா என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கொளுத்தும் வெயில் பிரசாரக் கலாச்சாரம் இந்தத் தேர்தலில் மட்டும் நடப்பது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தல் என்று ஆண்டாண்டு காலமாக இப்படித்தான் நடக்கிறது. ஆனால் முன்பைவிட இந்தக் கோடை,  கூடுதல் வெப்பத்தைக் கொட்டும் என்று இந்திய வானிலை மையம்  அறிவித்துள்ளது. அதே போல பருவமழையும் அதிக அளவு பெய்யும் என்றும் கூறி  எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்தத் தகவல்கள் அதிமுக தலைமைக்குத் தெரியுமா என்பதும், ஜெயலலிதாவைச் சூழ்ந்துள்ள  அதிகார மையம் இந்த தகவலை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனவா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியே.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்,  ஜெயலலிதா  அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த பிரசாரக் கூட்டங்கள் அனைத்துமே  ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் நடத்தப்பட்டவை. ஹெலிகாப்டர் பயணம், சொகுசு கார் பயணம், குளிர் சாதன வசதி கொண்ட பிரசார மேடை என்று கோடிக்கணக்கில் செலவு பிடித்த பிரசாரத்தை செய்தவர் ஜெயலலிதா.

ஆனால் அந்தக் கூட்டங்களுக்கு, நூறு அல்லது இருநூறு  ரூபாய்க்கும்,இரண்டு பொட்டலம் உணவுக்கும் 4 வாட்டர் பாக்கெட்டுக்கும் அழைத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடந்தனர். ஆண்கள் என்றால் குவார்ட்டர் வசதியும், வெஜ் அல்லது சிக்கன் பிரியாணி பொட்டலமும் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்  என்பது அந்த நாட்களில் வெளிவந்த செய்திகள். இதே நிலைதான் இப்போதும் தொடருகிறது என்பதுதான் வேதனையான விசயம்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற  அதிமுக பிரசாரக் கூட்டத்தில்,   இருவர் வெயிலின் கொடுமை தாங்காமல்  மயங்கி விழுந்து  இறந்துள்ளனர். 7 பேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்கள் இருவரும் ஆண்கள். மயங்கி விழுந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் பெண் காவலர்.  ஆயிரக்கணக்கானவர்களை மைதானத்தில்,கொளுத்தும் வெயிலில் பலமணிநேரம் கால் கடுக்க காத்திருக்க வைத்து,  குடிநீர் கூட கொடுக்காமல் வதைத்துள்ளனர் அதிமுகவினர். இந்த மரணங்கள் குறித்து ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,உடல் நலக்குறைவு காரணமாக இருவரும் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காலை 11 மணி முதலே பிரசாரக் கூட்ட திடலுக்குள் அனுமதிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்,  வெயில் தாக்கம் தாங்காமல் தவித்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அதனால் வெளியேற முயன்றவர்களை பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் தடுத்து விட்டனர். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராமல், “சி.எம்.வந்து விடுவார்; இப்போ போகக்கூடாது” என்று கடுமையான உத்தரவிட்டு அடக்கியுள்ளது.

அதேபோல அதிமுக பிரமுகர்கள்,” அம்மா பேசிட்டு போகும் வரை அசையாமல் இருக்கணும்னுதானே கூட்டியாந்தோம்” என்று கண்டித்தனர்.செய்வதறியாது திகைத்தனர் மக்கள். அதில், பலவீனமானவர்கள் மயங்கி சாய்ந்தார்கள். பதற்றம் ஏற்பட்டது. ஆனால் இவற்றை எதுவுமே அறியாத நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் பறந்துவந்து மேடையில் ஏறி பேசியுள்ளார் ஜெயலலிதா.கூட்டத்தின் நெருக்கம் மற்றும் கொளுத்தும் வெயிலின் தாக்கம் தாங்காமல், ஒரே இடத்தில் முடக்கப்பட்ட நிலையில்,  மயக்கமான பெண்களை பார்த்து பதறிய ஆண் உறவினர்கள் அவர்களுக்கு உதவிட முயன்றனர். ஆனால், சவுக்கு கட்டைகளும் லத்திகளும் அவர்களைத் தடுத்து விட்டன. இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

50க்கும் மேற்பட்டோர்,  மயங்கி விழுந்ததாக லோக்கல் நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. முதல்வர் பார்வையில் பட்டால் பிரச்னையாகும் என்று போலீசும் கட்சிக்காரர்களும் தடுப்பு வளையம் அமைத்து நிலைமையை சமாளித்துள்ளனர்.

நான்கு மணிக்கு ஜெயலலிதா கிளம்பிய பிறகுதான் மயங்கி கிடந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க போலீஸ் ஒப்புக் கொண்டுள்ளது. அங்கு யாரையும் உள் நோயாளியாக அனுமதிக்காமல் முதல் உதவி அளித்து உடனே அனுப்பிவிட ரகசிய ஆணைகள் மருத்துவமனைகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்… மனித உயிர்களைவிட, அதிகார பற்று  அவ்வளவு மேலானதா?’  என்று மனித உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

ஆனால் இதெல்லாம் தெரியாத நிலையில் அல்லது தெரிந்தே தெரியாதவாறு காண்பித்துக்கொண்டு,  இன்றும் அதே வெயில் கொளுத்தும் வேளையிலேயே தருமபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார கூட்டத்தில் ஹெலிகாப்டரிலும், ஏ.சி. காரிலும் சென்று சொகுசாக பிரசாரம் செய்ய இருக்கிறார்.

ஆனால் பிரசாரத்திற்காக அழைத்து வரப்படும் மக்களுக்கு அதே வெட்டவெளியில் வெயிலில் காய்ந்துகொண்டு அவரது பேச்சை கேட்க வேண்டும்.

ஜெயலலிதா பரப்புரைக் கூட்டங்கள் என்ன திறந்த வெளி சித்ரவதைக் கூடங்களா ?

–   தேவராஜன்

Leave a Response