கேரளாவில் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழ்ப்பிள்ளைகள் உதவவேண்டும் – சீமான் வேண்டுகோள்

கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது நேரிட்ட தீ விபத்தில் சிக்கி, 106 பேர் பலியாகினர். மேலும், 383 பேர் காயமடைந்தனர்.

கேரளத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

கொல்லம் அருகே பரவூரில் உள்ளது 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புற்றிங்கல் தேவி கோயில். இந்தக் கோயிலில் கடந்த 7 நாள்களாக திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான சனிக்கிழமை நள்ளிரவு, பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண்பதற்கு கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை இரவு திரண்டிருந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வாண வேடிக்கையில் வெடிக்கப்பட்ட சில பட்டாசுகள், மற்றோர் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு இடையே விழுந்து வெடித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடிக்கவே, நில அதிர்வு ஏற்பட்டது போன்று அப்பகுதியே பயங்கரமாகக் குலுங்கியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காதைப் பிளக்கும் வகையில் வெடிச்சத்தம் கேட்டது.

வெடிவிபத்தைத் தொடர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால், வாணவேடிக்கை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த மக்கள், பாதுகாப்புக்காக எங்கே செல்வதென தெரியாமல் தவித்தனர். அப்போது அங்கு நேரிட்ட தீ விபத்தில் சிக்கியும், மண்டப இடிபாடுகளுக்கு இடையே சிக்கியும் 106 பேர் பலியாகினர். 383 பேர் காயமடைந்தனர்.

கேரளா கொல்லம் கோவில் தீ விபத்து-  சீமான் இரங்கல்

கேரள மாநிலத்தில் உள்ள பரவூரில் இருக்கும் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 80க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதையும் பலர் காயமுற்றதையும் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மக்கள் அதிகளவு கூடுமிடங்களில் பட்டாசுகள் பயன்படுத்துவதில் கட்டுபாடுகள் கொண்டுவரவேண்டும் என்பது நாம் பல ஆண்டுகளாக வைத்துவரும் கோரிக்கைகளில் ஒன்று. கவனக்குறைவால் மக்கள் உயிர்ப் பலியாவது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அரசாங்கங்கள் இனியாவது மக்கள் அதிகளவு கூடுமிடங்களில் மேலும் எச்சரிக்கையாக இருந்து விபத்துகளைத் தடுக்கவேண்டும். இவ்விபத்தே கடைசி விபத்தாக இருந்திட வேண்டும்.

சிவகாசியில் இதுபோன்றதொரு பட்டாசால் தீ விபத்து ஏற்பட்ட பொழுது இதே கேரள தேசத்திலிருந்து நடிகர் மம்மூட்டி அவர்களின் உதவிக்கரம் நீண்டதை யார் மறந்தாலும் தமிழ்ப்பிள்ளைகள் மறக்கமாட்டார்கள். அந்த நன்றியுணர்வோடு இந்நேரத்தில் தமிழர்கள் அனைவரும் நம் சகோதர இன சொந்தங்களுக்கு தங்களாலான உதவிகளை மேற்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

ஈடுகட்டமுடியாத இழப்பை சந்தித்திருக்கும் மலையாள சகோதர்களின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது.

— செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி..

Leave a Response