ஜெயலலிதா பரப்புரையில் கூட்டமே இல்லை, படமெடுத்த புகைப்படக்காரரை அடித்து உதைத்த காவல்துறை

காலி நாற்காலிகளை போட்டோ எடுத்தியா?’’
விகடன் போட்டோகிராஃபரை தாக்கிய போலீஸ் அதிகாரி
ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்தில் அத்துமீறல்

சென்னை தீவுத் திடலில் நேற்று (ஏப்ரல் 9 ) மாலை நடைபெற்ற ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் ஆனந்த விகடன் போட்டோகிராஃபர் போலீஸ் அதிகாரியால் தாக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இன்று மாலை (சனிக்கிழமை) சென்னை தீவுத் திடலில் பிரசாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

இந்த பிரசார கூட்டத்தை கவரேஜ் செய்வதற்காக பத்திரிகையாளர்கள், டிவி மீடியாவினர் ஏகப்பட்டபேர் வந்திருந்தனர். அவர்களில் பலரை உள்ளே அனுமதிக்க போலீஸ் மறுத்ததோடு ஏகப்பட்ட கெடுபிடி செய்தனர்.

இதற்கிடையில் ஆனந்த விகடனின் போட்டோகிராஃபர் மீ.நிவேதன் கூட்டத்தில் தொண்டர்கள் அமர்ந்திருந்த பகுதியை போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது பாஸ்கர் என்ற போலீஸ் அதிகாரி வந்து, ‘காலி நாற்காலிகளை படம் எடுக்குறீயா? எந்த பத்திரிகை? உங்களுக்கு இதுதான் வேலையா? நக்ஸலைட் கேஸ்ல உள்ள தூக்கி போட்ருவேன்’ என்று மிரட்ட உடன் இருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் நிவேதனை தாக்கியதோடு அவரின் கேமரா, செல்போன், பர்ஸ்,

கேமரா பேக் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி கேமராவை அதிமுக தொண்டர்களிடம்கொடுத்து, ‘இதுல என்னென்ன போட்டோ இருக்குனு பாருங்க’ என்றார் போலீஸ் அதிகாரி பாஸ்கர். கேமராவில் இருந்த சிப்பை அதிமுகவினர் வெளியே எடுத்துக்கொண்டனர். பிறகு ஒரு குற்றவாளியைப் போல் 30 நிமிடங்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தி போலீசார் மிரட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது சக பத்திரிகையாளர்கள் பலர் வந்ததும், ‘தாக்க வந்த கட்சியினரிடம் இருந்து உங்கள் போட்டோகிராஃபரை நாங்கள்தான் காப்பாற்றினோம்’ என்று கூறி ஒன்றும் நடக்காதது போல நிவேதனை அனுப்பினர்.

நிவேதன் தாக்கப்பட்டது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாநரக போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது

ஜெர்னலிஸ்ட் அஸ்ஸோஸியேசன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி இதனை வன்மையாக கண்டிக்கின்றது, பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

ஜெயகிருஷ்ணன்
தலைவர்.,

Leave a Response