எடப்பாடி 5000 செபா 5000 ஓபிஎஸ் 1500 கேஏஎஸ் 2000? – தேர்தலில் விளையாடும் பணம்

நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான பரப்புரைகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தன.

அதன்பின்னர்தான் உண்மையான பரப்புரை தொடங்கியது என்று தகவல்கள் வருகின்றன.அப்படியென்றால்?

வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.திமுக அதிமுக மற்றும் விஜய் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுத்துவருகிறார்களாம்.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வரும் தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக மட்டும் சுமார் இருபத்துநான்கு கோடி செலவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு வாக்குக்கும் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறார் என்று சொல்கிறார்கள்.

அதேபோல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஐந்தாயிரம் தருகிறார் எனச் சொல்லப்படுகிறது.

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சு.முத்துசாமி, ஒவ்வொரு வாக்குக்கும் இரண்டாயிரம் ரூபாய் தருகிறாராம்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் விஜய் கட்சி சார்பாகப் போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன்,ஒரு ஒட்டுக்கு இரண்டாயிரம் தருகிறாராம்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஒரு வாக்குக்கு ஆயிரத்து ஐநூறு தருகிறார் என்று சொல்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் ஆளுக்குத் தகுந்தாற்போல் பணம் கொடுக்கிறார்கள் என்றும் அது ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை தரப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் ஆட்கள், வீடுவீடாகச் சென்று அந்த மளிகைக்கடைக்குப் போஙகள் என்று சொன்னார்களாம்.அங்கு போனால் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மறக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்கிறார்களாம்.

இவையெல்லாம் சமூகவலைதளங்களில் பதிவானவற்றில் நம் கண்களில் தட்டுப்பட்ட தகவல்கள்.

இதனால் மேற்குறிப்பிட்டவர்கள் மட்டும்தான் பணம் கொடுக்கிறார்கள் மற்றவர்கள் கொடுக்கவில்லை என்று பொருள் இல்லை.ஒட்டுமொத்தமாக எல்லாத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது என்றே அனைவரும் சொல்கிறார்கள்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே உள்ளது.தேர்தல் ஆணையம் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் திமுக,அதிமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் போட்டியிடமுடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

இவ்வளவு தொகையை முதலீடாகப் போட்டு வெற்றிபெறுபவர்களிடம் முழுமையான மக்கள் சேவையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எனவே,வாக்குக்குப் பணம் வாங்காமல் வாக்களியுங்கள் மக்களே!

அப்போதுதான் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தப்பு செய்தால் சட்டையைப் பிடித்துக் கேட்கமுடியும்.இல்லையெனில் தலைகுனிந்துதான் நிற்கவேண்டும்.

– கதிரோன்

Leave a Response