நான் பேசினால் எடப்பாடி நடமாடமுடியாது – செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையில் கே.ஏ.செங்கோட்டையன் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி….

இந்தியாவில் துரோகத்திற்கு என ஒருவருக்கு நோபல்பரிசு வழங்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் வழங்கவேண்டும்.அவர் தகுதியை விட்டு இதுபோன்ற பேச்சுகளைப் பேசியிருக்கிறார். வேதனை தரக்கூடிய ஒன்று.இதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.மக்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.

அது எடப்பாடி பழனிச்சாமிக்குப் புரியாது.கோபிசெட்டிபாளையத்தில் எவ்வளவு கோபத்தோடு உரையாற்றி இருக்கிறார் என மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்குமேல் அவரைப்பற்றிச் சொல்வது சரியாக இருக்காது. காலம்தான் பதில் சொல்லும்.பொறுத்திருந்து பாருங்கள்.

வீதியில் எடப்பாடி பழனிச்சாமிதான் நடமாட முடியாது.எடப்பாடி பற்றிப் பேச வேண்டுமென்றால் 1979 இல் ஆரம்பித்தால் தாங்கமாட்டார்.எப்படி என் இடத்தில் வந்தார்.எந்த வகையில் நின்றார்,எங்கெங்கே என்ன செய்தார். சொல்லமுடியாது.சொல்லத் தேவையில்லை. சொல்ல வேண்டிய தேவையை உருவாக்கினால் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பதவிக்குக் கண்ணீர் விட்டு அழுதீர்கள் என்று எடப்பாடி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, இவர் எங்க அமைச்சர் பதவி தருவது.சட்டமன்ற உறுப்பினர் இல்லையென்றால் இவர் எப்படி முதலமைச்சர் ஆவார். நாங்கள் ஆதரிக்கவில்லை என்றால் முதலமைச்சராகி இருக்கமுடியாது.
முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தவன் நான். என்னிடத்தில் எவ்வளவு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பது அவருக்குத் தெரியும்.அதையெல்லாம் புரிந்துகொண்டு பேசவேண்டும். நான் ஆதரிக்கவில்லையென்றால்,கையெழுத்து போடவில்லையென்றால் அவர் முதலமைச்சராகி இருக்கவே முடியாது. அவருக்கு அவ்வளவுதான் அரசியல் நாகரிகம் என்றார்.

Leave a Response