2000 கோடி கொடுத்து விஜய்யை விலைக்கு வாங்கியிருக்கிறது திமுக – பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி வியாபார கழகமாக மாற்றி, இரசிகர்களையும், தொண்டர்களையும், கட்சியையும் அடமானம் வைத்து, திமுகவை வெற்றிபெற வைக்கும் வசூல் ராஜாவாக மாறிவிட்டார் நடிகர் விஜய்.

இந்நிலையில், தேர்தல் ஆலோசகராக செயல்படும் அனைத்துக் கட்சி அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா வீட்டில் விருந்து சாப்பிட்ட விஜய்யை நினைத்து தவெக தொண்டர்கள் இரத்தம் கொதிக்கின்றனர். திமுக அரசைத் தட்டிக் கேட்டு, நடந்த தவறைச் சுட்டிக்காட்டி நியாயம் கேட்க வேண்டிய விஜய், ஆதவ் அர்ஜுனா இயக்கத்தில் டான்ஸ் ஆடுகிறார்.

அவரின் தேர்தல் வியாபார விருந்தில் தலையாட்டி பொம்மையாய் பங்கேற்கிறார். மக்கள் விரோத திமுக ஆட்சி தோற்றுவிடும், திமுக எனும் தீய சக்தி அழிந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய லாட்டரி பூத அடிமை ஆதவ் அர்ஜுனா மூலம் அரசியல் நடிகர் விஜய்யை பத்து பட சம்பளம் கொடுத்து விலை பேசிவிட்டனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக, ஆதவ் அர்ஜுனாவிடம் போட்ட ஒப்பந்தப்படி திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற மகிழ்ச்சியை எலக்சன் பார்ட்டி விருந்தாக கொண்டாடி மகிழ்ந்தார் விஜய்.

மிஷினரி அரசியல் செய்யும் விஜய், சமூகநீதியைப் புறக்கணித்து, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு செய்யும் துரோகத்தை வெற்றியாகக் கொண்டாடி, அரசியல் புரோக்கர் வீட்டில் விருந்து சாப்பிட்டதை வரலாறு மன்னிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் ஒரு பட சம்பளம் சுமார் இருநூறு கோடி என்று சொல்லப்படுகிறது.இந்த அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பத்து பட சம்பளத்தைக் கொடுத்து விஜய்யை விலை பேசிவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.இதன்மூலம் சுமார் இரண்டாயிரம் கோடி கொடுத்து விஜய்யை திமுக களத்தில் இறக்கியிருக்கிறது என்று சொல்லியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response