
ஈழத் தமிழர் சிக்கலால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. உ.த.பே. தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைத் தலைவர்கள் சி.முருகேசன், திருமதி.த.பானுமதி,சா.இராமன்,எம்.ஜி.கே. நிஜாமுதீன்,இரா.கோவிந்தராசு மற்றும் பொதுச் செயலாளர்கள் ந.மு.தமிழ்மணி,ஜோ.ஜான்கென்னடி உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.மிகச்சிறந்த பாடல் நூல்களின் ஆசிரியரும், தமிழீழ ஆதரவுப் பாடல்கள் பலவற்றைத் தந்தவருமான மறைந்த ஈரோடு தமிழன்பன் அவர்களும்,தமிழிலக்கிய ஆய்வறிஞரான தெ.ஞானசுந்தரம் அவர்களும்,தமிழ்த் தேசியக் களப் போராளியும்,எழுகதிர் ஆசிரியருமான அருகோ அவர்களும்,ஆசீவக ஆய்வறிஞரான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுகளுக்குத் துணைநின்ற அவரின் துணைவியார் பேராசிரியர் சக்குபாய் அவர்களும்,திருமழபாடி பேராசிரியர் அ.ஆறுமுகனார் அவர்களும்,மொழிப்போர் போராளியான தஞ்சை எல்.கணேசன் அவர்களும் காலமானது குறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு பெரிதும் வருந்துகிறது. அவர்தம் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
2.மன்னார் வளைகுடாக் கடல் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், மீன்களைப் பறித்துக் கொள்வதும்,வலைகளைச் சேதப்படுத்துவதும்,துப்பாக்கிச் சூடுநடத்தி உயிர்களைப் பலிகொள்வதும்,கடற்கொள்ளையர் என்ற பெயரில் சிங்களக் காடையர் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது.இந்தியக் கடற்படையும், இந்தியக் கடலோரக் காவல்படையும் அருகிலுள்ள மண்டபத்தில் இருந்தபோதும்,அவை இக்கொடும் நிகழ்வுகளை ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை.இந்நிகழ்வுகள் நடக்கும்போது தமிழ்நாட்டு மக்களின் பதைப்பையும்,துடிப்பையும் விளக்கி தமிழ்நாட்டு முதலமைச்சர்,இந்திய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதுகிறார்.ஆனால், ஒன்றிய அரசு அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை.தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியஅரசு இந்தியக் குடிமக்களாகக் கருதுவதில்லை.இத்தகைய ஆணவப் போக்கினை கடுமையாகக் கண்டிப்பதோடு,இப்படியான கொடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்காதபடி இந்தியஅரசு இலங்கை அரசை எச்சரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உலகத் தமிழர் பேரமைப்பு வற்புறுத்துகின்றது.
3.இலங்கையில், புதிய அரசமைப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் நிலையில்,இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும்,அவர்களின் உரிமைகளைக் காக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய ஒன்றியத்தின் தலைமையமைச்சருக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக சட்டமன்றத்தில் பலமுறை சிங்களஅரசின் இப்போக்கைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும்கூட,சிங்கள அரசின் இனவெறிப் போக்கு சிறிதளவுகூட குறைக்கப்படவோ, கைவிடப்படவோ இல்லை.
இலங்கையில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும், 1948 இல்10 இலட்சம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதையும்,அஞ்சல்,தொடர்வண்டி,சுங்கம்,மருத்துவம் ஆகிய துறைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதையும்,பொறியியல்,மருத்துவம் உள்ளிட்ட பல்கலைக்கழகப் படிப்புகளில் தரப்படுத்துதல் என்ற பெயரில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதையும்,அரசு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டதையும் கடந்தகால வரலாறு எடுத்துக்காட்டுகிறது.1956,1977,1981,1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடத்தப்பட்டன.15.08.1983இல் இந்திய விடுதலை நாளன்று கொடியேற்றிய இந்தியத் தலைமையமைச்சரான திருமதி.இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று அறிவித்தார்.2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற சிங்கள இனவெறியாட்டங்களில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17.01.26 இல் ஐ.நா.மனித உரிமை ஆணையம் தன்னுடைய அறிக்கையில்,இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகளாகியும்,தமிழர்களுக்கெதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.அதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவுமில்லை. போரின்போது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது சர்வதேசச் சட்டத்தைக் கடுமையாக மீறுவதாகும்.இது போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நிகராகும்.சிங்களப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதற்கான நடவடிக்கையைச் சிங்கள அரசு மேற்கொண்டு,அதற்கு முறையான மன்னிப்பு கேட்கவேண்டும்.அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும்.அவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் என அறிவித்துள்ளது.சர்வதேசச் சட்டங்களுக்குப் பொருந்தாத வகையில்,ஆள் கடத்தல், சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற தமிழர்களுக்கு எதிரான செயல்களை சிங்கள அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மேற்கு நாடுகள் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து அதுகுறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.அப்போது இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது.இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை குறித்து சிங்கள அரசே ஒரு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.கொலையாளியையே நீதிபதியாக நியமிக்க இந்தியா முன்வந்து தமிழர்களுக்கு எதிராகத் துரோகம் புரிந்தது,இது தொடர்பாக,கடந்தகால இந்திய ஒன்றியஅரசு ஈழத்தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததை கண்டித்து,பலமுறை தமிழக மக்கள் கண்டித்து கிளர்ந்தெழுந்து கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதை மனதில் கொண்டு இப்போதைய இந்திய ஒன்றியஅரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வராவிடில் வேண்டாத விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை செய்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


