19 நாடுகள் 26 ஆயிரம் மாணவர்களில் முதலிடம் பிடித்த ஈழத்தமிழர்

நாம்தமிழர் கடசித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…….

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் விஜேந்திரகுமார் – மேனகா இணையரின் அன்புமகன் அர்ச்சிகன் அமெரிக்க விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) பன்னாட்டு மாணவர்களுக்கிடையே நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

உலகின் 19 நாடுகளிலிருந்து 26,725 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அவற்றில் விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும்போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்கள் குறித்து அர்ச்சிகன் அளித்த செயற்திட்டமே வெற்றி பெற்றுள்ளதாக NSS அறிவித்துள்ளது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கக் கூடியதாகும்.

இலங்கை அரசால் இனவழிப்புக்கு உள்ளாகி மண்ணையும், மக்களையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து விடுதலைப்போரின் வலி சுமந்து, ஈழத்தாயகத்திலிருந்து பெற்றோருடன் தமிழ்நாட்டில் ஏதிலியாக வாழ்ந்துவரும் நெருக்கடிமிகு நிலையிலும், கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ள அன்புமகன் அர்ச்சிகனுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் அர்ச்சிகனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

அரைநூற்றாண்டுகால விடுதலைபோரில் ஏற்பட்ட பின்னடைவு, நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை, பன்னாட்டு அரங்கில் நீதிகோரும் நெடிய போராட்டம், ஈழத்தில் இன்றும் தொடர்கின்ற இனவழிப்பு கொடுமைகள், புலம்பெயர் நாடுகளில் எதிர்கொள்கின்ற துயரங்கள் என்று சோதனைகளும், வேதனைகளும் நிறைந்த தமிழினத்தின் நம்பிக்கை துளிர்களாக இருப்பவர்கள் தலைமுறைதாண்டி எழுந்துவரும் இளம் தமிழ்ப்பிள்ளைகளே. கடல் கடந்து, கரைசேர்ந்த இடங்களில் எல்லாம் விதையாய் விழுந்தோம்! அன்புமகன் அர்ச்சிகன் போன்று எம்மினப் பிள்ளைகள் தடைகளை தகர்த்து, தங்கள் அறிவாலும், ஆற்றலாலும் விருட்சமாக உயரும் நாளில் உறுதியாக எம் இனம் வெல்லும்!

வீறுகொண்டு எழுவோம்! வெற்றிகண்டு மகிழ்வோம்!

எங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response