கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்பிய குடும்பம் – விஜய் அதிர்ச்சி

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கரூர் நேர்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை 8.15 மணிக்கு நடிகர் விஜய் விடுதிக்குச் சென்று, உயிரிழந்த 37 குடும்பங்களில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிகழ்வுக்கு உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பம் உட்பட நான்கு குடும்பங்களில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை.

இந்த நிகழ்வில் பங்கேற்காததோடு, கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடும்பத்தினர் விஜய் கொடுத்த இருபது இலட்சம் ரூபாயை திருப்பி அனுப்பியுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.ரமேஷ் மரணத்துக்குக் காரணமான விஜய் நேரில் சென்று கூட ஆறுதல் கூறாததால் கடும் அதிருப்தி அடைந்து அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செயல் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response