
திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திருநெல்வேலியில் சீமான் தங்கியிருந்த கட்சி நிர்வாகி திருமண மண்டபத்தின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது….
பணகுடி பகுதி மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது.தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவருக்கு அங்கே நிலம் இருக்கிறது. அரசின் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நான் பணகுடி சென்றால் பிரச்சினையாகிவிடும் என்பதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கால்நடைகளின் வாழ்விடத்தில் அவைகளுக்கு அனுமதி வழங்காமல் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுத் தேவைகளுக்கு மட்டும் மணல், கற்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பயன்படுத்தினால் 300 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்த முடியும்.
தமிழ்நாட்டின் பால் தேவையை ஆந்திர மாநிலம் பூர்த்தி செய்கிறது. அங்கிருந்து வரும் பால் தூய்மையானதா என்ற கேள்வி எழுகிறது.
மெட்ரோ ரயில் திட்டம் ஒரு தோல்வியுற்ற திட்டம். சென்னையில் மெட்ரோ திட்டங்கள் மூலம் தூண்களாகவே நகர் காட்சியளிக்கிறது.அது சிங்காரச் சென்னை இல்லை, தூண் சென்னை ஆக உள்ளது. நாங்கள் இருப்பதால் பரந்தூர் விமான நிலையம் வராது.
மக்களுக்கு மறைமுகமாக இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை மூலமாக பணம் கொடுக்கப்படுகிறது.இலவச திட்டங்கள் அவசியம் இல்லை. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. திமுகவிற்கு மாற்று அதிமுக அல்ல.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரசு ஆகியவற்றுக்கு இடையே எந்தக் கொள்கை மாற்றமும் இல்லை. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டுப் பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகளை மூடுவேன் எனச் சொல்லவில்லை.
பீகாரில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாஜக வெற்றியைப் பெற்றுவிட்டது. அதுபோல் தமிழ்நாட்டில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கலாம். ஏன் ரூ.5 ஆயிரம் கூடக் கொடுக்கலாம்.
வாக்கிற்குப் பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழ்நாட்டில் தேவை
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


