தொடரும் கனமழை – பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுக்க மழை வெளுத்து வாங்கி வருகிறது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் புதுச்சேரி முதல் இராமநாதபுரம் வரை கடலோரப் பகுதிகளிலும் மற்றும் காவிரி படுகை மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அன்று அதிகபட்சமாக இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது.

மழை காரணமாக இராமேஸ்வரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேபோல், இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனும் சிவப்பு எச்சரிக்கையும், ஆரஞ்சு அலர்ட் எனும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். இன்று மதியம் வேளைக்குள் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழ்நாடு நோக்கி மாற வாய்ப்பு இருப்பதால், இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

அதன்படி, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும், புதுவையில் ஒரு சில இடங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதி கனமழை பெய்யலாம் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களுக்கும் ஆரெஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் திருச்சி, வேலூர், திருப்த்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 23 ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிதமான மழை வரும் 27 ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன-மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசம் என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால், சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response