ஆகஸ்ட் 22 அமித்ஷா ஓபிஎஸ் சந்திப்பு – டிடிவி பேட்டியால் எதிர்பார்ப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது….

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கின்றார். அவர் இருப்பது வெற்றிக்கு உதவி. எங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளார். பாஜக தலைவர்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சியினரை பலப்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத இறுதிக்குள் கூட்டணிக் கட்சிகள் நிலைமை சரியாகிவிடும்.

இதற்காக அமித்ஷா கடுமையாக உழைத்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்று யாரை முதல்வராக அறிவிக்கின்றார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான தேர்தலில் அமமுக முத்திரையைப் பதிக்கும். தேர்தலில் நான்குமுனைப் போட்டி ஏற்படும். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். வரும் ஜனவரி மாதத்திற்குள் தேஜ கூட்டணியில் உள்ள குளறுபடிகள் பேசி சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வரும் வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.அதற்காக அமித்ஷா தீவிர முயற்சி செய்கிறார் என்பதும் தெரியவருகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதனால்,ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழ்நாடு வரும் அமித்ஷா, ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இம்முறையாவது சொன்னபடி நடக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response