
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கு நேற்று வந்த அவர் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது….
பாஜக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதனால் மற்றவர்களை கூட்டணியில் இணைக்க நாங்கள் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தான் தலைமை தாங்குகிறது.அதிமுக உட்கட்சி விவகாரத்தை மேடையில் பேசுவது இல்லை. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சிக்கும் செல்லலாம். முன்னாள் எம்பி.க்கள் அன்வர்ராஜா, மைத்ரேயன் போன்றவர்கள் வேறு கட்சிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள்.
வருங்காலத்தில் ஒரேமேடையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருப்பார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, கோபமான எடப்பாடி பழனிச்சாமி,`இந்தக் கேள்விக்கு அவரிடமே பதில் கேளுங்கள்.அவர்தானே அப்படிச் சொன்னார் அவரிடமே கேளுங்கள். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் எடுப்பது தான் கூட்டணியின் இறுதிமுடிவு. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவார் என்ற கேள்விக்கும் இதுதான் பதில். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. இன்னும் பல கட்சிகள் எங்கள் தலைமையை ஏற்க வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணிக்கு நான் தான் தலைமை என்றால் கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேசக்கூடாது என்று அவர் சொல்லியிருந்தால் பொருத்தமாக இருக்கும் ஆனால் நயினார் நாகேந்திரன் சொல்வதற்கு பதில் சொல்லமாட்டேன் என்பது முரண்பாடாக இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


