பீகார் சிக்கல் – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி

பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டது. அதில் 65 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா ஜோஷி ஆகியோர் அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி ஒருவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள் என்றால், அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அதைகூட தேர்தல் ஆணையம் தெரிவிக்க மறுத்து வருகிறது. மேலும் இருக்கும் பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் ஏனோ தானோ என்று அதிகார தன்னிச்சையில் செயல்படுகிறது.
பீகார் என்னும் ஏழ்மையான மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தில் வெறும் 0.37சதவீதம் பேருக்கு மட்டுமே கணினி பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. இதில் சான்றிதழ் கூட பலருக்குக் கிடையாது. அது வளர்ந்து வரும் மாநிலம். இவை அனைத்தும் அம்மாநிலத்தின் சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது தெரிய வந்துள்ளது. மேலும் வாக்கு என்பது அவர்கள் பிறந்த இடத்திற்கான ஜனநாயக உரிமை ஆகும். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாமா? அதுவும் 48 மணி நேரத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியலைத் தயார் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் என்ன இருக்கிறது? இப்படி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் கூட நிறைய சிக்கல்கள் இருக்கும் நிலையில் ஒரே நாளில் பல்லாயிரம் ஆவணங்களை தேர்தல் ஆணையம் கையாள்வதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘‘இந்த விவகாரத்தில் சமூக செயற்பாட்டாளர் யோகேந்தர் யாதவ் உயிருடன் உள்ள ஏராளமான வாக்காளர்களை இறந்து போய்விட்டதாகக் கூறி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார்.
அதனை உடனடியாகச் சரி செய்ய ஆணையத்தின் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சரிபார்ப்புப் படிவங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் இறந்தவர்கள் உட்பட 65 இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை வேண்டுமானால் மனுதாரர் தரப்பில் இருந்து ஆய்வு செய்து கொள்ளலாம். இதில் தேர்தல் ஆணையத்திற்கு என்று சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. அதன்படி ஆணையம் நடந்து கொள்கிறது.
குறிப்பாக ஒரு கட்சி வெற்றி பெறுகிறது என்றால் ஆணையம் நல்லவர்கள் என்கிறார்கள், தோற்று விட்டால் பழி சுமத்துகிறார்கள். அரசியல் சண்டைகளின் நடுவே நாங்கள் மாட்டிக்கொண்டு விழிக்கிறோம் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘தேர்தல் ஆணையம் 65 இலட்சம் பேரை நீக்கி இருப்பதாகவும், அதில் 22 இலட்சம் பேர் இறந்து விட்டதாகவும் கூறுகிறீர்கள். ஆனால் இன்னொரு பக்கம் உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதை எதிர்தரப்பு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
22 இலட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால், அதன் விவரங்களை நீங்கள் ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்?. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை குடிமக்கள் சார்ந்து இருக்க வேண்டிய தேவை கிடையாது. இருப்பினும் அதே நேரத்தில் ஆதார் அட்டை என்பது குடியிருப்பு மற்றும் தனி அடையாளத்துக்கான ஆவணமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தனர்.

அதன் விவரம்:

1. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்கள் யார் யார் என்ற விவரங்களை இணையதளத்தில் அடுத்த நான்கு நாட்களில் வெளியிட வேண்டும்.

2. மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்கள் யார், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம், நீக்கப்பட்டவர்களின் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? புலம்பெயர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

3. மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் மாவட்டத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

4. இணையத்தளத்தில் வெளியிடப்படும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் எளிதில் தேடும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

5. மக்கள் அதிகம் வாங்கக்கூடிய உள்ளூர் மொழி செய்தித் தாள்களில் இந்த விவரங்கள் தொடர்பான விளம்பரம் தெளிவாகக் கொடுக்கப்பட வேண்டும்.

6. தூர்தர்ஷன் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் மூலமாக வாக்காளர் விவரங்கள் மற்றும் அது சேர்க்கப்படும் நடைமுறைகள் குறித்த தகவல்களை கண்டிப்பாக ஒளிபரப்ப வேண்டும்.

7. மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் சமூக ஊடக கணக்குகள் இருந்தால் அதிலும் இதுகுறித்து அறிவிப்புகள் கொண்ட விவரங்களை வெளியிட வேண்டும்.

8. நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு அலுவலகங்களில் உள்ள பலகைகளில் எழுதி வைக்க வேண்டும். அதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

9. இதில் முக்கியமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விரும்புவோர் தங்களது கோரிக்கையை வழங்கும் போது ஆதார் அட்டைகளையும் ஆவணமாக வழங்கலாம் என விளம்பரம் செய்ய வேண்டும்

10. இவை அனைத்தையும் வரும் 19 ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

பின்னர். இந்த விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

நாங்கள் எந்த ஆவணத்தையும் தர வேண்டியதில்லை என்று ஆணவமாகப் பேசி வந்த தேர்தல் ஆணையத்துக்கு இந்தத் தீர்ப்பு சரியான சவுக்கடி என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response